டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கார் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு இந்தியர்கள் உடல் எரிந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.
டெக்சாஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.30) இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர் பென்டன்வில்லை நோக்கி காரில் பயணித்துள்ளனர். இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத், ஃபரூக் ஷேக், லோகேஷ் பலச்சார்லா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன் ஆகிய நான்கு பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக சென்றுள்ளனர்.
பெண்டன்வில்லேவில் வசித்து வந்த ஆர்யன் மற்றும் ஃபாரூக் இருவரும், டல்லாஸில் உள்ள ஆர்யனின் உறவினர்களைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, லோகேஷ் தனது மனைவியைப் பார்க்க பெண்டன்வில்லுக்குச் சென்று கொண்டிருந்தார், தர்ஷினி தனது மாமாவைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களுக்குப் பின்னால் வேகமாக வந்த லாரி அவர்களது கார் மீது மோதியுள்ளது. அந்த கார் அடுத்தடுத்த வாகனங்களில் மோதி தீ பற்றிக்கொண்டது. காரில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் தீயிலும் சிக்கிக்கொண்டதால், வெளியே வர முடியாமல் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் குறித்து தற்போதுதான் விவரம் தெரிந்ததால், இந்த தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இறந்தவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர், டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகே அவரவர் உடல்கள் அடையாளம் காணப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த அவரவர் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த தர்ஷினியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவி செய்யுமாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தர்ஷினியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: உலகின் அதிநவீன போர் விமானம்! F16க்கே இந்த நிலைமையா?