காத்மண்டு(நேபாளம்): நேபாள நாட்டில் பருவமழை காலம் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வழக்கமாக அந்நாட்டில் மழைகாலம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிவடைந்து விடும். ஆனால், இந்த முறை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் காத்மண்டுவில் கடந்த 27ஆம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தவித்து வந்த 1,053 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நேரிட்டதால் காத்மண்டுவின் ஒரு பகுதி வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். நகரின் தென் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேற முடியாத நான்கு பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். காத்மண்டுவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக நாட்டின் பிற பகுதிகளில் நிலச்சரிவு நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானாவுக்கு 5 கோடி நிவாரண நிதி: ராமோஜி குழுமம் அறிவிப்பு!
செய்தியாளர்களிடம் பேசிய நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்ஹாக், "நாட்டின் பிறபகுதிகளிலும் பாதிப்புகள் நேரிட்டுள்ளதாக தகவல் வந்திருக்கிறது. அதிகாரிகள் பாதிப்புகள் குறித்து தகவல்கள் திரட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
மீட்புப் பணிகள் குறித்து பேசிய நேபாளத்தின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிஸ்வோ அதிகாரி, "நாடு முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபடுமாறு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொடர் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பேருந்துகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் காரில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது", என்று கூறினார்.