வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் குறித்த தகவலை எப்பிஐ வெளியிட்டுள்ளது. தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், அவரை அமெரிக்க ரகசிய போலீசார் சுட்டுக் கொன்றனர். டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் பென்சில்வேனியாவின் பெத்தெல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
என்ன காரணத்திற்காக டிர்மப் மீது இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரியவராத நிலையில் அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். டிரம்ப் பேசிக் கொண்டு இருந்த நிகழ்ச்சி மேடையில் இருந்து சரியாக 130 அடி தூரத்தில் உள்ள கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது.
அதேநேரம் கட்டடத்தின் மீது சந்தேகப்படும் வகையில் இளைஞர் நின்று கொண்டு இருப்பதை கண்டு பிரசாரத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் ஆனால் அது குறித்து பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டிரம்ப் மீது AR-style வகை ரைபிளை கொண்டு இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இளைஞரிடம் AR-style ரைபிள் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து எப்பிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இத்தகைய வன்முறைக்கு எந்த நியாயமும் இல்லை, உலகில் எங்கும் இடமில்லை. ஒருபோதும் வன்முறை மேலோங்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்த டிரம்ப் கூடிய விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் உக்ரைனுக்கு தளவாடங்களை வழங்குவது மற்றும் அமெரிக்க ராணுவம் உதவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு! அலறும் அமெரிக்கா! - DONALD TRUMP SHOT IN US