துபாய்: துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா ஆவார். துபாய் இளவரசியான இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனை அடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு பெண் குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
மேலும், மற்ற ஆட்சியாளர்கள் போல அல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்பவரும், சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் உள்ளவருமான இளவரசி ஷேக்கா மஹ்ராவுக்கு, தனியாக யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையில், இளவரசி ஷேக்கா மஹ்ரா தனது கணவர் ஷேக் மனா அல் மக்தூம்மை விவாகரத்து செய்ததாக திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேக்கா மஹ்ரா ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "அன்புள்ள கணவருக்கு, நீங்கள் பலருடன் தொடர்பில் இருப்பதால் நான் நமது விவாகரத்தை அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உங்களை கவனித்துக்கொள்ளுங்கள்" என்றும் அதற்கு கீழே, "உங்கள் முன்னாள் மனைவி" என்றும் பதிவிட்டு முத்தலாக் (Triple Talaq) முறையில் தனது விவாகரத்தை அறிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தம்பதியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர் (unfllow) மற்றும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.
இதற்கு முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு, துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு பதிவின் மூலம் தனது விவாகரத்து குறித்த குறிப்பைக் கொடுத்திருந்தார். அதில், "நாம் இருவர் மட்டும்" என்று குறிப்பிட்டு, தனது மகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓமன் மசூதி துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொலை! மற்றொரு இந்தியர் படுகாயம்! என்ன நடந்தது?