டாக்கா (வங்கதேசம்): லங்கதேசத்தின் சத்கிரா மாவட்டத்துக்குட்பட்ட ஈஸ்வரிபூர் கிராமத்தில் ஷியாம் நகரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஜெஷோரேஸ்வரி கோயில். இங்கு வீற்றிருக்கும் காளி தேவியின் தலையில் சூடப்பட்டிருந்த தங்கக் கிரீடம் நேற்று திருடுப்போய் விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
கோயில் அர்ச்சகர் திலீப் முகர்ஜி நேற்று காலை வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு சென்றுள்ளார். அவர் சென்றப்பின் மதியம் 2 -2:30 மணி அளவில் இத்திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.
காளியின் கிரீடம் களவு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் துப்புரவு பணியாளர்கள், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் திருடர்களை கண்டறிய, கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று ஷியாம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தைசுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட இந்த கிரீடத்தை, கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி, தமது வங்கதேச பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ஜெஷோரேஸ்வரி கோயிலுக்கு விஜயம் செய்தபோது பரிசாக அளித்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது.
We have seen reports of theft of the crown gifted by PM Modi to Jeshoreshwari Kali Temple (Satkhira) in 2021 during his visit to 🇧🇩
— India in Bangladesh (@ihcdhaka) October 11, 2024
We express deep concern & urge Govt of Bangladesh to investigate theft, recover the crown & take action against the perpetrators@MEAIndia @BDMOFA
இதையும் படிங்க: இந்தியா-ஆசியான் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்த 10 முக்கிய அம்சங்கள்
அப்போது மோடி, தமது கையாலேயே கிரீடத்தை காளியின் தலையில் சூட்டினார். அத்துடன் ஜெஷோரேஸ்வரி ஆலயத்தில் தான் வழிபாடு நடத்தியது தொடர்பான வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அனாரி எனப்படும் பிரம்மனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள 51 சக்தி பீடங்களை ஒன்றாக திகழ்கிறது.
உயர்நிலை விசாரணைககு வலியுறுத்தல்: இதனிடையே, காளி தேவிக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்த கிரீடம் களவுப்போனது குறித்து உயர்நிலை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. "வங்கதேச பயணத்தின்போது,ஜெஷோரேஸ்வரி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசளித்த கிரீடம் திருடுப் போனது என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வங்கதேச அரசு இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, கிரீடத்தை விரைவில் மீட்க வேண்டும். அத்துடன், இக்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.