பீஜிங் : இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் நிலையான மற்றும் உறுதியான உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக சீனா தெரிவித்து உள்ளது. அண்மையில் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, இந்தியாவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும், தூதரக மற்றும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினையில் சுமூகம் மற்றும் சாதகமான சூழலை மீட்டெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
சீனாவுடனான உறவு என்பது இந்தியாவுக்கு முக்கிய மற்றும் குறிப்பிடத்தக்க வகையிலானது என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் இருதரப்பு உறவுகளில் நிலவும் அசாதாரண சூழலை விலக்கக் கொள்ள எல்லையில் நிலவும் நீண்ட கால பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க விரும்புவதாக பிரதமர் கூறினார்.
மேலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான மற்றும் அமைதியான உறவு இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்திற்கும் உலகிற்கும் முக்கியமானது என பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், எல்லை பிரச்சினை விவகாரத்தில் உறுதியான மற்றும் நிலையான உறவின் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் வலியுறுத்துவதாக சீனா தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்தை சீனா குறிப்பிட்டு உள்ளதாக கூறினார். மேலும் இந்தியா - சீனா இடையே பிராந்திய ரீதியிலான அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பொதுவான விருப்பங்கள் குறித்த பேச்சுவார்த்தையை விரும்புவதாக மாவோ நிங் தெரிவித்தார்.
எல்லையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் தூதரக மற்றும் ராணுவ மட்டத்திலான உறவை சீனா பேணி வருவதாக அவர் கூறினார். அதேநேரம் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துதல், உரையாடல், வேறுபாடுகளை சரியாக கையாண்டு இருதரப்பு உறவுகளை நல்ல மற்றும் நிலையான பாதையில் கொண்டு செல்ல சீனாவுடன் இந்தியாவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பாங்கோங் ஏரியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதலை தொடர்ந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதுவரை இந்தியா - சீனா இடையே 21 முறை ராணுவ கமாண்டர் மட்டத்திலான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன.
கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரி, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் ஜியனான் தபான் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனா தரப்பிலும், இந்தியா தரப்பில் தீப்சங், தெம்சோக் பகுதியில் மீண்டும் சாதாரண நிலையை கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐபோன்கள் பயனர்களே உஷார்..! ஆப்பிள் போன்களில் ஸ்பைவவேர் தாக்குதல்! ஆப்பிள் எச்சரிக்கை! - Apple Alert Users To Spyware Attack