டாக்கா: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டே வெளியேறினார். இதனால் வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்தச் சூழலில், வங்கதேசத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சி நாட்டின் போர் நினைவுச் சின்னங்களை மதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்ததாலேயே தற்போது இங்கு ஆட்சியே கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில், வங்கதேசம் உருவாக காரணமாக இருந்த விடுதலைப் போர் தொடர்பான புகைப்படங்கள், அந்நாட்டு அருங்காட்சியகத்தில் இத்தனை காலமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த நினைவுச் சின்னங்கள், ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்புகளுக்குச் சான்றாக கருதப்பட்டது.
இந்த அருங்காட்சியகம், விடுதலைப் போரின் போது இந்தியா - வங்காள தேச நட்புறவின் கதைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதை உறுதிசெய்யும் காரணியாகவும் இருந்தது. இந்த நிலையில், அந்த அருங்காட்சியகம் ஆகஸ்ட் 5 அன்று ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது.
வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள விடுதலைப் போர் அருங்காட்சியகத்தில், ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி உட்பட விடுதலைப் போராட்டத்தின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அருங்காட்சியகத்தின் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் "மிகப்பெரிய தியாகத்தின் மூலம் பெரிய விஷயங்கள் அடையப்படுகின்றன" என்ற மேற்கோள் வாசகமும் உள்ளது.
மாணவர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று, போரின் போது வங்காள மொழி பேசும் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களைக் காண்பிக்கும் புகைப்படங்களைக் காண்பார்கள். அதே நேரத்தில், மேற்கு பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிற்கு எதிரான கிளர்ச்சியை வலுப்படுத்தியும், இந்தியாவின் நட்புறவையும் வெளிப்படுத்தியது. மேலும், மேற்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தின் விடுதலைக்கு இந்தியாவின் பெரும் ஆதரவையும் இது காட்டியது.
வங்கதேச மக்கள் மனதில் விடுதலைப் போராட்ட நினைவுகளை காட்சியின் வாயிலாக பதிய வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. போராட்டத்தின் போது மக்கள் என்ன தியாகம் செய்தார்கள்? போரின் போது என்ன நடந்தது? மக்கள் எவ்வாறு அட்டூழியங்களை எதிர்கொண்டார்கள் என்பதை அடுத்தடுத்த சந்ததியினர் தெரிந்துகொள்ளவே இந்த அருங்காட்சியகம் முதன்மையாக நிறுவப்பட்டது.
ஆனால், ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ச்சி அடைந்து அவர் வெளியேறிய பிறகு அனைத்துமே காலப்போக்கில் கரைந்து விடுமோ என்ற ஏக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பைக் காட்டும் சின்னங்களும் ஆபத்தில் உள்ளன. முந்தைய வரலாற்றை மறைக்கும் வகையில் புதிய வரலாறு எழுதப்படுவதென்பது, தியாகம் செய்தவர்களுக்கு எதிரான மிகப்பெரிய பாவமாகவே பார்க்கப்படும்.
மேலும், வங்கதேசப் போரில் போராட்டக்காரர்கள் வகுப்புவாத கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டி இந்தியாவில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து, சில தரப்பினருக்கு இந்தியா மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் பல தசாப்தங்களாக அனுபவித்து வந்த நட்பு ரீதியான தொடர்பு இனிமேல் உடையாமல் தக்க வைக்க இந்தியா உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா - வங்கதேசத்தின் 1971ஆம் ஆண்டின் போர்க் கதைகளை புதிய தலைமுறையினர் விட்டுவிட்டு, தற்போதைய உள்நாட்டு போர்க்களத்தில் சுவர்களில் எழுதப்பட்டிருப்பதையே நினைவில் வைத்துக்கொள்ள போகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
இதையும் படிங்க: வங்கதேசத்தின் அரசியல் நெருக்கடியும், அதற்கான காரணங்களும்!