டெக்சாஸ் (அமெரிக்கா): மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனை வளாகத்துக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பணியில் இருந்த பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு கொல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.இவ்வழக்கை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள், கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், கொலைக்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட பதாகைகளுடன் இறந்த பெண் மருத்துவருக்கு மெழுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
உலகின் மிகப்பெரிய மருத்துவ மையமான டெக்சாஸ் மருத்துவ மையத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு மருத்துவ அமைப்புகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள், உறுப்பினர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் பயிற்சி பெற்ற ஏராளமான மருத்துவர்கள் ஹூஸ்டன் டெக்சாஸ் மருத்துவ மையத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவர் பூர்ணிமா இருதயராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்கள் சார்பில் இந்த கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த சம்பவம் ஒரு பெண்ணாக, ஒரு மகளாக, ஒரு தாயாக என்னை பாதித்திருந்தாலும், அதையும் தாண்டி, ஒரு பெண் மருத்துவராக அதிகம் பாதித்துள்ளது. அன்று அந்த இடத்தில் சிதைந்து கிடந்தது ஒரு பெண்ணோ அல்லது பெண் மருத்துவரோ மட்டும் கிடையாது. அங்கு சிதைந்து கிடந்தது மனிதம். நமது கலாச்சாரம், நீதி, நேர்மை, சட்டம் இவையெல்லாம் தான் சிதைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடவாமல் இருக்க, நாம் மௌனம் கலைப்பது அவசியமானது.
இச்சம்பவம் குறித்து சிறிது நேரம் வருத்தம் தெரிவித்துவிட்டு, சிறிது காலம் சமூக வலைதளங்களிலும், நண்பர்களுடனும் பேசிவிட்டு, அதன்பின் அவரவர் வேலையை பார்ப்பது என்று இப்படிதான் இதுநாள் வரை நடைபெற்றுள்ளது. இனியும் நாம் அப்படி செய்வது, குற்றவாளிகளுக்கு துணைப்போவது போன்றது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடவாமல் இருக்க தேவையான வழிமுறைகளை நாம் அனைவரும் மௌனம் கலைத்து சேர்ந்து செய்ய வேண்டும்.
முதலாவதாக உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கான நியாயமும், நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான கோரிக்கைகளை அரசாங்கத்திடமும், அதிகாரியிடமும் வைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடவாமல் இருக்க பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுகொள்வதற்கும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
மருத்துவமனை உள்ளிட்ட பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றும் இடங்களில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய கோரி அரசாங்கத்திடம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை வைக்க வேண்டும். இது போன்ற வன்முறைகளை நாம் இனியும் ஏற்றுக்கொள்ள கூடாது, இது நமது சமுதாயத்திற்கு ஏற்றது அல்ல, மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று என குற்றம் இழைத்தவர்களும், குற்றம் இழைக்க தூண்டியவர்கள் மட்டுமல்ல, மனிதர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்கள் வலிமை அல்ல, ஆண்மை அல்ல. இது கோழைத்தனமான, கேவலமான செயல் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மருத்துவராகவோ அல்லது இன்ஜினியராகவோ ஆக்கிவிட்டோம் என்று பெருமை கொள்வதைவிட மனிதனாக மாற்றிவிட்டோம் என என்று பெருமை கொள்கிறோமோ அன்றுதான் நமது சமுதாயம் பாதுகாப்பான சமுதாயமாக மாறியிருக்கும். அதற்கு தேவையான வழிமுறைகளை கண்டறிவது மிஞ்சியிருக்கும் மனிதத்தை காக்க நினைக்கும் ஒவ்வொருவரின் கடமை” என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு; முக்கிய கைதியிடம் உண்மைக் கண்டறியும் சோதனை! - kolkata woman doctor case