சென்னை: நமது நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய பல்வேறு துறைகளில் பெண்கள் மேலோங்கி உள்ளனர். அரசியல், மருத்துவம், உயர்கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் கொடி கட்டி பறந்து வரும் பெண்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் பெண்கள், பொது இடங்களில் கழிப்பிட வசதி முதல் நாப்கின்களை அப்புறப்படுத்துவது வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் பெண்கள் பணியாற்றுகின்றனர். இவ்விடங்களுக்கு தங்களின் தேவைகளுக்காகவும் பல பெண்கள் வருகின்றனர். உதாரணமாக, சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்காக அரசு அலுவலகங்களுக்கும், பணப் பரிவர்த்தனைகளுக்காக வங்கிகளுக்கும், உடல்நலக் குறைபாட்டிற்காக மருத்துவமனைகளுக்கும் செல்கின்றனர்.
அதில் பல பெண்கள் மாதவிடாயை (menstrual) எதிர்கொண்டிருப்பர். இவ்விடங்களில் இப்பெண்களுக்கு சுகாதார வசதிகள் தரமானதாக இருக்கிறதா என்று கேட்டால்? 100 சதவீதம் தரமானதாக இருக்கிறது என்று கூற முடியாது என்கின்றனர் பொதுமக்கள். அது மட்டுமல்லாமல், கறை படிந்து, துர்நாற்றத்துடனேயே இருப்பதாகவும், நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான வசதிகளும் இல்லாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இப்படியான சுகாதாரமற்ற கழிப்பிடங்களை உபயோகப்படுத்துவதால் பலர் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். கல்வி நிலையங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் கூட இதே நிலை தொடர்கிறது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, கடந்த ஜூலை 23ஆம் தேதி இது குறித்து எம்பி கனிமொழி சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
அதில் அவர், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் இந்த நேரத்தில், அவ்விடங்களில் பெண்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது துரதிஷ்டவசமானது என்றும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் சுகாதாரமற்ற கழிப்பறைகளால், பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் மற்றும் பணியாற்றும் பெண்கள் வரை பல மணி நேரம் இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவல நிலை இன்றைக்கும் தொடர்வதாகவும், இதன் காரணமாக சில பெண்கள் வேலை செல்லவே தயங்குவதாகவும் குறிப்பிட்டார்.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்று இந்த அரசு பெருமைப்படும் நேரத்தில், இந்த அவல நிலை அவமானகரமானது என்று குறிப்பிட்ட அவர், இப்பிரச்னையை கருத்தில் கொண்டு அரசு, பெண்களின் சுகாதாரத் தேவைகளை எல்லா இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். இவர் மாநிலங்களவையில் தெரிவித்த கருத்துக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் பெண்களுக்கான சுகாதார தேவையை பெண்களின் உரிமையாக கருத வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) குறிப்பிட்டுள்ளது.
பெண்களின் சுகாதாரத்தை, சுகாதார பிரச்னையாக அல்லாமல், மனித உரிமைகள் பிரச்னையாக அங்கீகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், பெண்களின் சுகாதாரத்திற்கு மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள கூறியுள்ளது.
- முதலாவது சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதால், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெண்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- இரண்டாவது மாதவிடாய் சுகாதாரம் குறித்து சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கற்பிக்க வேண்டும். மாதவிடாய்க்கு பயன்படுத்தும் பொருட்கள், நீர், நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும்.
- மூன்றாவது பெண்களுக்கான சுகாதார வசதிகளை செய்து கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து, அதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களிலும் பெண்களின் சுகாதாரத்திற்கு ஏற்றவாறு மாற்றவும் உலக சுகாதார நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: உங்களுக்கு உங்கள் மேல் அக்கறை இருக்கா?..செல்ஃப் கேர் தினம் சொல்ல வருவது என்ன? - SELF CARE TIPS