சென்னை: நீரிழிவு நோய் பாதிப்புகள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த நீரிழிவு நோயால் பாத பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, நீரிழிவு நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, கால் இழப்புகளை தவிர்க்கும் வகையில், ‘ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம்’ ரூ.26.62 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் கீழ் தமிழ்நாட்டில் பாத பாதிப்புகளைக் கண்டறியும் 2,286 பரிசோதனை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்பட உள்ளது. இதில் 100 அரசு மருத்துவமனைகள் மற்றும் 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் அடங்கும். மேலும், 15 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்பட உள்ளது.
இந்தச் சூழலிலி நீரிழிவு நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகளைக் கண்டறிவது குறித்தும், சிகிச்சை அளிப்பது குறித்தும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “சர்க்கரை நோய் தொடர்ந்து 10 முதல் 20 ஆண்டுகள் இருந்தால் வேறு சில நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஏனென்றால், நீரிழிவு நோயின் காரணமாக செல்கள் மாற்றம் அடையும். அப்போது நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்படுகின்றன. அதனால் மைக்ரோவாஷ்குலர் பாதிப்பு ஏற்பட்டு, பாதத்தில் புண் வரக்கூடும். எனவே, இந்த புண்ணை சரியான முறையில் குணப்படுத்தவில்லை என்றால், அடுத்து காலை எடுக்க வேண்டிய நிலை உருவாகும்.
இதனை தடுப்பதற்கு தான் தமிழக அரசால் பாதம் பாதுகாப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் 80 லட்சம் பேர் நீாிழிவு நோயாளிகள். இவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.
இவர்களின் புண்கள் நம் கண்ணால் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தால் அதற்கு சிகிச்சை அப்போதே சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், பெரிதாக இருந்தால் புண்ணை சுத்தம் செய்வதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சுத்தம் செய்யப்படும். அதனால் புண் அடுத்த நிலைக்குச் செல்லாமல் பாதுகாக்கலாம்.
எனவே, தொடர்ந்து நீரிழிவு நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு காலில் புண் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். அதனால் அவர்களுக்கு புண் வரும்பட்சத்தில் எவ்வாறு பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும் என கற்று கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் தேவையான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்க முடிகிறது.
இந்த பயிற்சி பெற்றவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களும் கண்டுபிடிக்கும் வகையில் பயிற்சி ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்கள் வரும் போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கிறது. இதனை, தொடர்ந்து செய்தால் கால் துண்டிப்பதில் தப்பிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
நீரிழிவு நோயால் இத்தனை பாதிப்பா? இந்த நீரிழிவு நோய் பாதிப்பில் நாள்பட இருந்தால் பாதத்தில் புண் ஏற்படும், இதனைத் தொடர்ந்து, கூடுலாக ரத்தக் கொதிப்பு ஏற்படலாம். அதிலும் புகைப்பிடித்தல் மூலம் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து கவனமாக செயல்பட வேண்டும். அதற்கு மக்களைத் தேடி மருத்துவத்தில், மருந்துகள் வீடுகளில் வந்து தரப்படுகிறது. இல்லையென்றால், ஆரம்ப சுகாதர நிலையத்திலும் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தொடர் பாதுகாப்பு: பொதுமக்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரை அளவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், புண், மற்ற இணை நோய்கள் படை எடுக்க வாய்பில்லை. மேலும், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் பாதத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்லக்கூடாது.
புண் சிறதாக இருக்கும் போது மருத்துவரை அனுக வேண்டும், ஏனென்றால் ஒரு நிலைக்கு மேல் வலி தெரியாது. ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும். பின் இதன் விளைவாக காலை எடுக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே, மக்கள் கவனமாக விரைந்து மருத்துவரை அனுகுவதன் மூலம் காலை அகற்றும் நிலைக்குச் செல்லாமல் தவிர்க்கலாம்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாடுகள் வைத்து இருக்க வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் இருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குறைந்து வரும் பார்வை திறன்... கண்புரை நோயாக இருக்கலாமா?: மருத்துவர் கூறுவது என்ன?