சென்னை: இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்களாக உள்ளனர். தைராய்டு குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவலாக ஏற்படவில்லை. ஆகவே, தைராய்டு மற்றும் அதற்கான சிகிச்சை குறித்துப் புரிந்த கொள்ள உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 25ஆம் தேதி தைராய்டு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 1965ஆம் ஆண்டில் தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வுக்கு அடித்தளம் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய தைராய்டு கூட்டமைப்பின் ஆண்டு ஆலோசனைக் கூட்டமானது, கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுவது, உலகம் முழுவதும் விரிவாக்கப்பட்டது.
தைராய்டு நோய்கான காரணம்: ஆரோக்கியம் அல்லாத உணவு முறைகள் மற்றும் உடல் சோர்வே தைராய்டு தொடர்பான நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. ஆகவே, ஆரோக்கியத்துடன் கூடிய உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தைராய்டு பிரச்னை ஏன் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது என விளக்குகிறார் சென்னை எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த முதியோர் மருத்துவ நிபுணர் நிவேதா ஸ்ரீவத்சா.
தைராக்சின் ஹார்மோன்: நமது உடலில் உள்ள கணையம், அட்ரீனல் மற்றும் பிட்யூட்டரி போன்ற நாளமில்லா சுரப்பிகளில் (Endocrine Gland) தைராய்டும் ஒன்று. இது நமது கழுத்துப் பகுதியில் சுவாசக் குழாய் மற்றும் பேச்சுக்குழாய்க்கு இடையே பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும்.
இந்த தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உணவு செரிமானம், இதய செயல்பாடு என மனித உடல் இயக்கத்திற்கு அடிப்படை இந்த தைராக்சின் ஹார்மோன் பயன்படுகிறது.
அந்த வகையில், மனித உடல் இயக்கத்திற்கு அடிப்படையாக இந்த தைராய்டு சுரப்பி அமைந்திருந்தாலும், இந்த சுரப்பியின் மூலம் சுரக்கப்படும் தைராக்சின் ஹார்மோன்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்சனை உண்டாகிறது.
மேலும், இந்த தைராய்டு நோய் பிரச்சனை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அந்த வகையில், தைராக்சின் ஹார்மோன்கள் குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்றும், அதிகமாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தைராய்டு சுரப்பியால், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஹைப்போ தைராய்டிசம்: ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் அயோடின் குறைபாடு. தைராக்சின் உற்பத்திக்கு அயோடின் சத்து அத்தியாவசியமாகும். கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
உடல் பருமன், முகம் மற்றும் கால்கள் வீக்கம், சோர்வான உணர், பசியின்மை, அதிக தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் போன்றவை ஹைப்போ தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
ஹைப்பர் தைராய்டிசம்: ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைராய்டு பகுதியில் நாடியுல்ஸ் (Nodule) என அழைக்கப்படும் கட்டிகள் ஏற்படலாம். இந்த கட்டிகளில் 85 சதவீதம் சாதாரண கட்டியாகவும், 15 சதவீதம் புற்றுநோய் கட்டியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
உடல் எடை குறைதல், கை கால் நடுக்கம், திடீரென மனநிலை மாறுவது, தூங்கும்போது மூச்சு சீரற்று இருப்பது, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது, அடிக்கடி வயிற்றுப்போக்கு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், கண் வெள்ளை விழி இமைகளுக்கு வெளியே வருதல் உள்ளிட்டவை ஹைப்பர் தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
TSH பரிசோதனை: தைராய்டு சுரப்பியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரை அணுகும்போது, தைராய்டு சுரப்பியின் நிலையை அறிய ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பரிசோதனையானது TSH பரிசோதனை (Thyroid Stimulating Hormone Test) என அழைக்கப்படுகிறது. இந்த சோதனையின் மூலம், நோயாளியின் உடலில் தைராய்டு சுரப்பி எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சையைப் பெற முடியும்.
மேலும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி உணவு முறை மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றின் மூலமாக இந்த தைராய்டு நோயிலிருந்து எளிதில் குனமடையாளாம் என்று மருத்துவர் நிவேதா ஸ்ரீவத்சா கூறுகிறார்.
இதையும் படிங்க: ஆஃப் பாயில் சாப்பிட்டால் ஆபத்து! பரவும் பறவைக் காய்ச்சலால் எச்சரிக்கை