சென்னை: உடல் ரீதியாக ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலர் மனதிலும் துளிர் விட ஆரம்பித்தாலும், ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, நேரமின்மை என பல காரணங்களால் அதனைத் தட்டிக் கழிக்கும் நிலை தான் நிலவுகிறது.
நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும், டயட் இருக்க வேண்டும் என அதை நோக்கி ஓடும் பலர், ஃபிட்டாக இருப்பதற்கு நடைப்பயிற்சி செய்தால் போதுமானது என்கிறனர் ஆரோக்கிய நிபுணர்கள். நடப்பது உடலுக்கு நல்லது தான், ஆனால் எப்போது நடந்தால் என்ன ஆகும்? காலையில் நடந்தால் நல்லதா? அல்லது மாலையில் நடக்கலாமா? என கேள்விகள் உதிக்கத் தொடங்கும். அதற்கான பதில்களை இந்த தொகுப்பில் காணலாம்.
காலை நடைப்பயிற்சி பலன்கள்: முதன்மையாக, காலையில் எழுந்து குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் நடப்பதால் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பல நன்மைகளை தருகிறது. அதிகாலை வேளையில் கிடைக்கும் சூரிய ஒளியில் நடப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
காலையில் நாம், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கலோரிகளை விரைவாக எரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் எளிதாக இருக்கும் என்கிறனர் ஆரோக்கிய நிபுணர்கள். அது மட்டுமல்லாமல், வாரத்திற்கு 5 நாட்களாவது இதனைப் பின்பற்றி வந்தால் சுவாச திறன் மேம்படுகின்றது என்கின்றனர். குறிப்பாக, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், காலையில் நடப்பதால் தூக்கத் திறன் மேம்பட்டு நிம்மதியான தூக்கத்தைப் பெறுகின்றனர் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் எடையைக் குறைக்கப் போராடும் நபர்கள் தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களும், வாரத்திற்கு 5 நாட்கள் இதனைப் பின்பற்றினால் மாற்றங்களைக் காணலாம்.
மாலை நடைப்பயிற்சி பலன்கள்: மாலை நேர நடைப்பயிற்சி நாள் முழுவதும் ஏற்படும் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும் என்கின்றனர் நிபுணர்கள். 2010 ஆம் ஆண்டு வெளியான ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் அண்ட் மெடிசின் இதழின் ஆய்வில், மாலையில் நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது.
அதேபோல், உடலில் உள்ள தசைகளுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, நல்ல உறக்கத்திற்கும் பங்களிக்கிறது என்கின்றனர் ஆரோக்கிய நிபுணர்கள்.
காலையா? அல்லது மாலையா? எது நல்லது: மாலையில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி சில நேரங்களில் சோர்வை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, அதிக பசியை ஏற்படுத்தி அதிக உணவை உண்ணும் நிலையும் ஏற்படுகிறது. அதிலும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை வைத்துப் பார்த்தால் அதிகாலையில் மாசுபாடு குறைவாக இருக்கிறது. அந்த வகையில், மாலையில் நடப்பதை விடக் காலையில் நடப்பதே பயனுள்ளதாக இருக்கிறது.
இதையும் படிங்க: தொப்பையை குறைக்க போராடுகிறீர்களா? அதைவிட மோசமான நிலை என்ன தெரியுமா? உடனே தெரிஞ்சுக்கோங்க!