சென்னை: சோம்பல் காய்ச்சலால் (Sloth Fever) கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால், கருவில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சென்னை எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் நந்த குமார் தெரிவித்துள்ளார்.
Oropouche வைரஸ் தொற்று என்று அழைக்கப்படும் Sloth fever ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் வேகமாகப் பரவி உலகளவில் பொது சுகாதராத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. "மர்மமான அச்சுறுத்தல்" என தி லான்செட் இந்த தொற்றுக்கு பெயரிட்டுள்ளது. அமெரிக்கா, நியூயார்க், ஐரோப்பிய நாடுகளில் பலரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றுக்கு பிரேசிலில் இதுவரை 2 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சோம்பல் காய்ச்சல் குறித்து மருத்துவர் நந்த குமார் கூறும் போது, "பிரேசில், கியூபா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் மோசமான வைரஸ் காய்ச்சலான சோம்பல் காய்ச்சல் பரவி வருகிறது. சமீபத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த காய்ச்சல் குறித்து பல எச்சரிக்கைகளை விடுத்தனர்.
Sloth Fever என்றால் என்ன? Oropouche என்ற வைரஸ் தொற்றால் பரவக்கூடியது தான் இந்த ஸ்லாத் காய்ச்சல். மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு பரவக்கூடிய Oropouche வைரஸ் டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரஸின் குடும்பத்தைச் சார்ந்தது தான். Sloth என்றால் அசையா கரடி என்று பொருள். முதன்முதலில் 1955-ல் ஸ்லாத் கரடியில் தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு பரவுவது கண்டறியப்பட்டது.
எப்படி பரவுகிறது?: மிட்ஜெஸ் (Midge) எனச் சொல்லக்கூடிய ஒரு வகையான கொசு போன்ற பூச்சி மற்றும் ஈக்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவுகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் இருந்து பயணம் செய்தவர்களிடம் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல, பல நாடுகளிலும் இந்த தொற்று பரவி வருகிறது.
அறிகுறிகள் என்ன? அதிகப்படியான காய்ச்சல், தொண்டை வலி, சளி, தலைவலி, உடம்பு வலி, இடுப்பு வலி, சோர்வாக உணர்வது, சொறி போன்றவை ஸ்லாத் காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. அதேபோல, அரிதாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இந்த காய்ச்சலுக்கு என்று தனிப்பட்ட அறிகுறிகள் எதுவும் கிடையாது. பொதுவான காய்ச்சலுக்கான அறிகுறிகள் தான் ஸ்லாத் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக இருக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு ஆபத்து? பொதுவாகவே, இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 60% குணமடைந்து விடுவார்கள். சில நேரங்களில் சிக்கலான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, கர்ப்பிணிகள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அவர்கள் கருவில் உள்ள குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முறை: இந்த வைரஸ் தொற்றுக்கு என இதுவரை தனிப்பட்ட மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எதுவும் கிடையாது. சுற்றுலாப் பயணிகள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதால் கொசு மற்றும் பூச்சிகள் கடிக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்த்தொற்று வராமல் தடுக்க முடியும்.
இந்தியாவில் என்ன நடவடிக்கை? வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களை பரிசோதனை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளை எதிர்கொண்டால், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாத்துக்கொள்வது, காய்ச்சலுகான மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, நன்றாக ஓய்வு எடுப்பதன் மூலம் இந்த நோய்த்தொற்றால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.