சென்னை: உலகம் முழுவதும் டெங்கு பாதிப்பால் கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பொதுவாக, மழைக்காலங்களில் தேங்கும் நீரிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களிலிருந்து டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை எனக் கூறும் WHO, பாதிக்கப்பட்டவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதன் மூலம் குணமடைகிறார்கள் என்கிறது. இது வரையில், 2023ல் தான் அதிகமான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
டெங்கு அறிகுறிகள்: டெங்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொசு கடித்த 4-10 நாட்களுக்குப் பின்னர் தான் டெங்குகாய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரியும். இந்த அறிகுறிகள் 2 முதல் ஒரு வாரத்திற்கு இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
- அதிக காய்ச்சல்: உடல் வெப்ப நிலை 40°C (104°F) வரை செல்லலாம்
- கடுமையான தலைவலி
- கண்களுக்குப் பின்னால் வலி
- தசை மற்றும் மூட்டு வலி
- வாந்தி
- பலவீனமாக உணர்வது
- உடலில் அரிப்பு ஏற்படுவது
மீண்டும் பாதிப்பு வருமா?: ஒரு முறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறுவதை உலக சுகாதார நிறுவனம் மறுக்கிறது. இரண்டாவது முறையாக டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதன் வீரியம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கிறது.
ஏற்படும் பாதிப்புகள்:
கடுமையான வயிற்று வலி |
தொடர் வாந்தி |
சுவாசப் பிரச்சனை |
ஈறுகள் அல்லது மூக்கில் இரத்தப்போக்கு |
எப்போதும் சோர்வாக இருப்பது |
வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் |
அதீத தாகம் |
வெளிர் மற்றும் குளிர்ந்த தோல் |
பலவீனமாக உணர்வது |
இப்படியான அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட அறிவுறுத்தப்படுகிறது. இரண்டாவது முறையாக டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் தொடர் சிகிச்சையில் இருப்பது அவசியம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
டெங்குவில் இருந்து மீண்ட பின்னரும் பாதிப்பா?: பொதுவாக, டெங்குவில் இருந்து மீண்டவர்கள் இரண்டு வாரங்களுக்குக் கடுமையான சோர்வு மற்றும் பலவீனத்தை உணரலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் நன்றாக ஓய்வெடுப்பது அவசியமாக அமைகிறது. மேலும், இளநீர், தண்ணீர் போன்ற நீர் ஆகறங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)
இதையும் படிங்க: சர்க்கரை நல்லதா...கெட்டதா? இனி, சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!