திருச்சி: அண்மைக்காலமாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரை கடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக 23 வகையான நாய்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் தடை செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்பவர்கள் அவைகளுக்கு கருத்தடை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுருந்தது. இந்த நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதற்கான காரணம் என்ன? அந்த குணத்தை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து பிரபல கால்நடை மருத்துவமனை மருத்துவர் சிரஞ்சீவி குமார் விளக்குகிறார்.
திருச்சி சாஸ்திரி ரோடு பகுதியில் புதிதாக FURRY GENIUS என்ற பெயரில் செல்ல வளர்ப்பு பிராணிகளுக்கான பிரம்மாண்டமான அதிநவீன மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் நிறுவனரும், கால்நடை மருத்துவருமான சிரஞ்சீவி குமார், நாய்கள் எதற்காக மனிதர்களை கடிக்கின்றன, அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பவை குறித்து விரிவாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. மாடு என்றால் முட்டும். குதிரை என்றால் உதைக்கும். நாய் என்றால் கடிக்கும்.
எந்த நேரத்தில் நாய்கள் கடிக்கும்?: நாய் எந்த நேரத்தில் கடிக்கும் என பார்த்தால், ஒரு நாய் தன்னுடைய பாதுகாப்பிற்காக கடிக்கும். வெளி ஆள் ஒருவர், அதன் இடத்திற்குள் நுழைந்தால் கடிக்கும். அதேபோல் வெடி வெடிக்கும்போது அல்லது அந்த நாயை தாக்க முற்படும்பொழுது கடிக்கும். குட்டி ஈன்ற நாய், தன் குட்டிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக கடிக்கும்.
நாய்கள் எதனால் தாக்குகின்றன?: காலநிலை மாற்றம் அதாவது வெயில் அதிகமாக உள்ளது, குளிர் அதிகமாக உள்ளது அல்லது மழை காரணமாகவோ நாய்கள் கடிக்காது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் வெயில் காலங்களில் நாய்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதும் அவற்றின் ஆக்ரோஷத்துக்கு ஒரு காரணம். நாய்கள் தெருவில் செல்லும்போது அவற்றை கல்லால் அடிப்பது, நாயின் அருகில் சென்று ஹாரன் அடிப்பது, பைக், காரில் செல்லும்போது வேகமாக செல்லுவது, இது போன்ற செயல்களால் நாய்கள் எரிச்சலடையக்கூடும்.
இதன் காரணமாகவே நாய்கள், குறிப்பிட்ட சில கார்கள் அல்லது இருசக்கர வாகனங்களை துரத்தும். ஒரு நாய் உங்களை தாக்க வருகிறது என்றால் அதன் கண்களை பார்க்கக்கூடாது. ஏனென்றால் அந்த நாய்க்கு நீங்கள் சவால்விடுவதாக எண்ணிக்கொள்ளும்.
குழந்தைகளை அதிகம் கடிப்பது ஏன்?: நாய்களின் சமூக பழக்க வழக்கங்களை அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். ஒரு குழந்தை நாயை விளையாட்டுப் பொருளாக கருதி அந்த நாயை தாக்குவது, குழந்தைகள் நாய்கள் அதிகம் கடிக்க முதல் காரணம். இதை குழந்தைகள் செய்வதன் மூலம் அக்குழந்தைகளை கவனித்து, சமயம் வாய்க்கும்போது அக்குழந்தைகளை நாய்கள் கடித்துவிடும்.
நாய்கள் கடிக்காமல் பார்த்து கொள்வது எப்படி?: நாய் கடிப்பதை நிறுத்துவது கடினம். ஆனால், நாய் மற்றவர்களை கடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இதுபற்றி நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியம். வீட்டில் வளர்க்கப்படும் நாய் மீது பாசம் கொண்டு வளர்க்க வேண்டும். கடிக்கக்கூடிய அனைத்து நாய்களும் வெறிநாய்கள் அல்ல. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அல்லது தெரு நாய்கள் கடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.
அது மற்றவர்களை கடிக்காமல் பார்த்துக்கொள்ள அதனுடைய குணாதிசயங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது நாட்டில் விலங்குகளுடன் பழகுவதற்கு சமூகமயமாக்கல் இல்லை. வெளிநாடுகளில் வளர்ப்பு பிராணிகள் பொது போக்குவரத்துகளில் பயணம் செய்வது என்பது சர்வசாதாரணம்.
இங்கு வளர்க்கப்படும் விலங்குகளுக்கு கவனம் செலுத்துவது குறைவே. அதற்கான தனி கவனம் செலுத்தப்பட வேண்டும். உணவு மற்றும் அதற்கான உறைவிடம் கொடுத்திருக்க வேண்டும். நாய் வளர்ப்பவர்கள் அதற்கான உணவு மற்றும் தடுப்பூசிகளை முறையாக வழங்க வேண்டும். தெரு நாய்கள் என்று பார்க்கும்போது, அனைத்து மாநகராட்சிகளும் கருத்தடை என்பதை முறையாக செயல்படுத்தி வருகின்றன.
மூன்று மடங்கு வலிமை: இதனால் தெரு நாய்கள் விகிதம் குறைந்து வருகிறது. இருந்த போதிலும் இருக்கின்ற தெரு நாய்களை துன்புறுத்தக் கூடாது. தற்போது பல்வேறு விதிகளை அரசு விதித்திருந்தாலும் அந்த நாய்களுக்கான குணாதிசயங்கள்படி நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நாய் ஒருவரை கடிக்கும்போது நாம் அதனை தடுப்பது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஒருவரை தாக்கும்போது அதன் வலிமை மூன்று மடங்காக உயரும்.
நாய்கள் வளர்க்க விரும்புவார்கள் அந்தந்த சூழ்நிலையில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாய்களின் வாயை கட்டி நடை பயிற்சி மேற்கொள்ளும்போது அவற்றுக்கு ஹீட்ஸ் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தனது இருப்பிடத்தை பொறுத்து நாய்களை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, அடுக்குமாடி குடியிருப்பில் ராட்வைய்லர் நாய்களை வளர்ப்பது சற்று கடினம். எனவே சூழலுக்கு ஏற்ப நாய்களை தேர்வு செய்வது நல்லது.
அதேபோல் வளர்க்கப்படும் நாய்கள், நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் வளருமா என்பதை அறிந்து கொண்டு அந்த நாய்களை வளர்க்க வேண்டும என்று மருத்துவர் சிரஞ்சீவி குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Heat Stroke: கால்நடைகளுக்கும் வெக்கை வாதம்: தற்காத்துக்கொள்ள சில வழிகாட்டுதல்கள்.! - Livestock Affected By Heat Wave