சென்னை: குறைந்த அளவிலான ஆஸ்பிரின் உட்கொள்வதன் மூலம், காய்ச்சல் நோய் தொற்றுகளால் கர்ப்பத்தில் ஏற்படும் இரத்த நாள அழற்சியை குணப்படுத்தலாம் என்பதும், கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடிக்கு சிறந்த ரத்த ஓட்டத்தை உருவாக்கலாம் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆஸ்பிரின் (Aspirin) அல்லது அசட்டைல்சலிசைலிக் (Acetylsalicylic acid) என்பது சலிசைலேட்டுகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்து ஆகும். இவை வலி நிவாரணியாகவும், காய்ச்சல் மற்றும் வீக்கத்திற்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக குறைந்த அளவிலான ஆஸ்பிரின் மாத்திரைகள் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க உதவுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைகழகத்தின் சர்தேச குழு, அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரி டப்ளின் குழுவுடன் இணைந்து, ஆஸ்பிரின் மாத்திரைகளை காய்ச்சல் நோய்த்தொற்றுகளுக்கு பயன்படுத்த முடியுமா என ஆய்வு செய்தது. எலிகள் மீது நடத்தப்பட்ட இவ்வாய்வில் குறைந்த அளவிலான ஆஸ்பிரின் அளிக்கப்பட்ட எலிகள் மேம்பட்ட கரு வளர்ச்சி மற்றும் சந்ததிகளுடன் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தன.
இன்ஃப்ளூயன்ஸா ஏ அல்லது ப்ளூ காய்ச்சல் உள்ள எலிகளின் கருக்கள் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவை ப்ளூ பாதிக்கப்படாத எலிகளைவிட சிறியதாக இருந்தன. மேலும் அவற்றின் கருக்கள் குறைந்த இரத்த ஆக்ஸிஜன் மற்றும் மோசமான இரத்த நாள வளர்ச்சியுடன் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெல்போர்னில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆராய்ச்சி மாணவி டாக்டர். ஸ்டெல்லா லியோங் கூறுகையில், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ப்ளூ நோய்த்தொற்றுகள் என்பது ப்ரிக்ளாம்ப்சியா எனப்படும் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை போன்றது. இது பெருநாடி மற்றும் இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. வாஸ்குலார் அமைப்பு வீக்கமடைவதால், இது சீரற்ற இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் பெருநாடியின் செயல்பாட்டை பாதிக்கிறது.
இது குறிப்பாக கர்ப்பக்காலத்தில் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். நஞ்சுக்கொடிக்கு நல்ல இரத்த ஓட்டம் இருப்பது கரு வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்த ஆராய்ச்சி மனித மருத்துவ பரிசோதனைகளுக்காக காத்திருக்கும் அதே வேளையில், கர்ப்பக்காலத்தில் குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது பாதுகாப்பனது என்று ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.
இருப்பினும், கர்ப்பிணிகள் புதிய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் ஆராய்ச்சி குழு அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உப்பு அதிகமாக சேர்ப்பதால் இவ்வளவு பாதிப்புகளா? மருத்துவர்கள் கூறுவது என்ன? - Effects of excessive salt