சென்னை: வித விதமான "ஹேர் கலரிங்" இன்றைய இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பலரும் அதைக் கொண்டாடி வருகின்றனர். ஹேர் கலரிங் செய்வதன் மூலம் முழுமையான மன மகிழ்ச்சியைப் பெறுகின்றனர்.
அவர்களின் தனித்துவமான தோற்றம் மற்றும் அழகை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் பக்கவிளைவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. தேவை என்பது அவரவர் விருப்பம் என்றாலும், ஆரோக்கியம் என்பது சமூகத்தையும் சார்ந்தது எனவும், ஹேர் கலரிங் அடிக்கடி செய்வதால் புற்று நோய் உள்ளிட்ட அபத்தங்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- முடியின் வேர்கள் சேதமடைதல்: ஹேர் கலர்களில் அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற மூலப்பொருட்கள் உள்ளன. இவை முடியில் முழுமையாக ஊடுருவி நிறத்தைத் தக்க வைக்க உதவுகின்றன. இந்த மூலப்பொருட்கள் மட்டும் இன்றி இன்னும் பல மூலப்பொருட்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது, முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பதம் முற்றிலும் அகன்று விடும்.
முடி வறட்சி ஏற்படுதல், உடைதல், உதிர்ந்து போகுதல் மற்றும் முடியின் வேர்ப் பகுதிகளைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- ஒவ்வாமை பிரச்சனை: இரசாயனம் கலந்த இந்த ஹேர் கலர்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம் எனவும், சில நேரங்களில் படை நோய், கொப்புளங்கள் உள்ளிட்ட பல உபாதைகளை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- புற்று நோய் அபாயம்: ஹேர் கலர்களில் காணப்படும் இரசாயனங்கள் குறித்து சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வின் அடிப்படையில், அதில் இருக்கும் இரசாயனத்தின் விளைவு காரணமாகச் சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா உள்ளிட்ட சில வகை புற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தனிநபர் தங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து இவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு வழி வகிக்கும்: ஹேர் கலரிங் என்பது சிலருக்கு ஸ்டைல் என்றாலும் பலர் வெள்ளை முடியைக் கருப்பாக மாற்றவும், சிலர் தங்களின் தோற்றத்தை அழகாகக் காண்பிக்கவும் இந்த ஹேர் கலரை முழுமையாக நம்பி இருக்கிறார்கள்.
அவர்கள் நம்பிக்கையை ஹேர் கலர் செய்த பின் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ அல்லது, இந்த ஹேர் கலர் செய்த காரணத்தால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தாலோ, அவர்கள் மனதளவில் தளர்ச்சி அடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் சக மனிதர்களுடன் இணைந்து இருக்க, பழக என அனைத்திலும் தயக்கம் காண்பிப்பார்கள். இயற்கையான அழகைப் பாதுகாத்துக்கொள்வது இதிலும் சிறந்தது என உளவில் நிபுணர்கள் கூறுகின்றனர்.
- சரி ஹேர் கலர் செய்தே ஆக வேண்டும் என்றால் என்ன செய்வது?
- ஹேர் கலர் செய்தே ஆக வேண்டும் என்று நினைக்கும் நபர்கள், உங்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
- ஹேர் கலர் செய்வதற்கு மன்பு யாராக இருந்தாலும் முதலில் பேச் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
- ஹேர் கலர்களுக்கு பின்னால் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.
- முடிக்கு அடிக்கடி இயற்கையான வகையில் ஊட்டச்சத்தை மீட்டெடுக்க உதவுங்கள்.
- ஹேர் கலரிங் செய்யும்போது நீண்ட இடைவெளியைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
இவற்றை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் முடியின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் நீங்கள் ஆரோக்கியம் பெறலாம் என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
இதையும் படிங்க: அக்குள்களில் அதீத வியர்வை ஏற்படுகிறதா? கட்டுப்படுத்த இதை ஃபாலோ பண்ணுங்க.! - How To Stop Underarm Sweat