கண் பார்வையை வலுவாக்கும் புதிய மருந்தை எண்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடித்தது. இதற்காக இந்திய மருத்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (DCGI) ஒப்புதலும் பெற்றது. பிரஸ்பயோஃபியா எனும் பார்வைத்திறன் குன்றும் நோய்க்கான மருந்தாக இந்த புதிய சொட்டு மருந்தை மக்கள் பயன்படுத்தலாம் என அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனைத் தொடர்ந்து பலக் கேள்விகளும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. அதற்கு பதிலளிக்கும் விதமாக எண்டோட் நிறுவனம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஊடகங்களில் வரும் வதந்திகள் அனைத்தும் பொய்யானவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த தருணத்தில் பிரஸ்பயோஃபியா (Presbyopia) என்றால் என்ன, புதிய பிரஸ்வூ கண் சொட்டு மருந்து எப்படி இதற்கு தீர்வாகும், என்னென்ன சர்ச்சைகள் உலாவருகிறது என்பதை விரிவாகக் காணலாம்.
எண்டோட் மருந்து நிறுவனத்தின் பிரஸ்வூ கண் சொட்டு மருந்து (Entod Pharmaceuticals PresVu Eye Drops):
பிரஸ்பயோஃபியா நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வைத்திறன் குறைபாட்டுடன் இருக்கும் நபர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் பிரஸ்வூ கண் சொட்டு மருந்து. இதனை முறையாகப் பயன்படுத்தினால், வெறும் 15 நிமிடங்களில் பார்வைத் திறனில் முன்னேற்றம் ஏற்படும் என தயாரிப்பு நிறுவனமான எண்டோட் தெரிவித்திருந்தது.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) இந்த மருந்து பயன்பாட்டிற்கு முன்னதாக அங்கீகாரம் வழங்கியது. அதனைத் தொடர்து தற்போது இந்திய மருத்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் நிறுவனம் ஒப்புதல் பெற்றது. இந்த சூழலில், மருந்து தயாரிப்பு நிறுவனம் கூறுவது உண்மையல்ல என அதன் உயர்மட்ட அலுவலர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டது.
பிரஸ்பயோஃபியா என்றால் என்ன?
பிரஸ்பயோஃபியா என்பது முதுமை காரணமாக ஏற்படும் கண் பார்வைக் குறைபாடாகும். முக்கியமாக 40 வயதுக்கு மேலுள்ள நபர்களிடம் இது அதிகமாகப் பார்க்கமுடியும். சாதாரண பரிசோதனையின் வாயிலாகவே இந்த குறைபாட்டின் தாக்கத்தை நம்மால் தெரிந்து கொள்ளலாம். மேலும், லென்ஸ் உடன் கூடிய கண் கண்ணாடியை அணிந்து, நம் பார்வைத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். கிடைத்துள்ள அறிக்கைகளின்படி, உலகளவில் 1.09 பில்லியன் முதல் 1.80 பில்லியன் மக்கள் பிரஸ்பயோஃபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள பிரஸ்வூ சொட்டுமருந்து, இதற்கான நிரந்தரத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசியிருக்கும் Entod Pharmaceuticals தலைமை செயல் அலுவலர் நிகில் கே மசூர்கர், "PresVu பல வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் வாயிலாக உருவாக்கப்பட்டது. இந்திய மருத்து கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கிய ஒப்புதல், இந்தியாவில் கண் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் பணியில் ஒரு முக்கிய படியாகும்.” என்று கூறியுள்ளார்.
பிரஸ்வூ மருந்தின் முக்கியக் குறிப்புகள்:
- எண்டோட் மருந்து நிறுவனம் பிரஸ்வூ கண் மருந்தின் மூலப்பொருள் மற்றும் தயாரிப்பு முறைக்காக காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது.
- பிரஸ்வூ கண் சொட்டு மருந்தானது, வாசிப்பு கண்ணாடிகளுக்கு உடனடி மாற்றாக அமையும் என நிறுவனம் கூறியுள்ளது.
- இந்த மருந்து கண்களுக்கு நல்ல ஈரப்பதத்தை வழங்குகிறது.
- இம்மருந்தில் உள்ள அட்வான்ஸ்டு டைனமிக் பஃபர் டெக்னாலஜி (Advanced Dynamic Buffer Technology) கண்ணீரின் pH நிலைக்கு விரைவாக ஒத்திசைந்து, நீண்ட நேரம் கண்களைப் பாதுகாக்கிறது.
- கண்களில் இருக்கும் தெளிவின்மையை 15 நிமிடங்களில் சரிசெய்யும் திறன் இந்த மருந்திற்கு இருப்பதாக மருத்துவர் ஆதித்யா சேதி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு எண்டோட் அளித்த பதில்
இந்த மருந்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், ஏ.என்.ஐ நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டது. அதில், எண்டோட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் வேலைப்பார்க்கும் ஒருவர், நிறுவனத்தின் புதிய மருந்து குறித்த தகவல்கள் அனைத்தும் பொய் என்று தங்களிடம் தெரிவித்தாக கூறியிருந்தது. இது காட்டுத்தீ போல் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக டிசிஜிஐ ஒப்புதல் பெற்ற பிரஸ்வூ மருந்தின் தரம் கேள்விக்குறியானது. ஆனால், உடனடியாக இதற்கான விளக்கத்தை எண்டோட் நிறுவனம் வழங்கியது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எண்டோட் மருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் நிகில் கே மசூர்கர், “பிரஸ்வூ கண் சொட்டு மருந்தைக் குறித்து நாங்கள் ஊடகங்களிடமோ அல்லது பொதுமக்களிடமோ நெறிமுறையற்ற அல்லது பொய்யான தகவல்களை வழங்கவில்லை என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கிறோம். பெரியவர்களுக்கு ஏற்படும் பிரஸ்பயோஃபியா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை தரவுகளின் அடிப்படையில் தான் நாங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளோம். பரந்து விரிந்திருக்கும் செய்தி ஊடகங்களில் தகவல்கள் அடிப்படை தன்மையற்ற வகையில் பரப்பப்படுகிறது. அதுவே, சர்ச்சைக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்துள்ளது,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: புதுவீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை.. முதலமைச்சர், ஈடிவி பாரத்துக்கு நன்றி!