ஐதராபாத்: எண்டோஸ்கோபியின் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் கண் இமை வழியாக மூளையில் உள்ள கட்டியை அகற்றி புது சாதனையை படைத்துள்ளனர், ஐதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட்ரோஎன்டாலஜி (AIG) மருத்துவமனையின் மருத்துவர்கள்.
கடந்த ஆறு மாதங்களாக மங்கலான பார்வை மற்றும் வலது கண்ணில் வலியை அனுபவித்து வந்த 54 வயது பெண் ஒருவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண் பார்வை குறைபாடு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்த பெண் பல சிகிச்சைகளை மேற்கொண்டு பலனளிக்காததால் ஏஐஜி மருத்துவமனையை நாடியுள்ளார்.
அங்கு, அப்பெண்ணிற்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அபிராசந்திர கபிதா, நரம்பியல் அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர். சுபோத்ராஜு மற்றும் கண் மருத்துவர்கள் குழு முழுமையான பரிசோதனையை மேற்கொண்டனர். பரிசோதனையில், அப்பெண்ணின் மூளையில் ஸ்பினோ ஆர்பிடல் கேவர்னஸ் மெனிங்கியோமா (Spheno Orbital Cavernous Meningioma - SOM) இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கட்டியானது அப்பெண்ணின் மண்டை ஓடு மற்றும் கண்ணின் பின்புறத்தில் உள்ள சந்திப்பு பகுதியில் சுமார் 2 செ.மீ அளவில் இருந்துள்ளது. இந்த மாதிரியான பதிவுகளோடு வரும் நோயாளிகளுக்கு மண்டை ஓட்டில் கீறல் போடப்பட்டு கட்டிகள் அகற்றப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த அறுவை சிகிச்சை பல அபாயங்களை கொண்டுள்ளதால், AIG மருத்துவ குழுவினர், இந்த கட்டியை அகற்றுவதற்கு புது முயற்சியை கையாண்டுள்ளனர். அந்த வகையில், எண்டோஸ்கோபிக் பக்கவாட்டு டிரான்ஸ்ஆர்பிட்டல் அணுகுமுறை (endoscopic lateral transorbital) எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுத்தனர்.
இந்த முறையானது, மண்டை ஓட்டில் எந்த வெட்டுக்களையும் ஏற்படுத்தாமல், அதாவது மூளையை நேரடியாகக் கையாளாமல், கண்ணிமையின் மேல் பகுதியில் ஒரு சிறிய கீறல் மூலம் கட்டியை அணுகவும் அகற்றவும் அனுமதிக்கிறது.
இந்த சிகிச்சை குறித்து மருத்துவர் கூறுகையில், "இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது. மேலும், இந்த சிகிச்சை விரைவான மீட்புக்கு வழிவகுக்கிறது" என்றார். இதற்கிடையில், அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெங்கு பாதித்தவர்களுக்கு உயிர் கொள்ளியாக மாறும் பிளாஸ்மா கசிவு..தெலங்கானவில் உச்சத்தை தொடும் டெங்கு!