ஹைதராபாத்: குழந்தைகள் விரல் சூப்புவது (Thumb/Finger Sucking) மிகவும் இயல்பானது தான். ஆரம்பத்தில் குழந்தையின் இந்த செயல் அழகாக தெரிந்தாலும், இதே பழக்கம் தொடரும் போது சிரமமாக மாறிவிடுகிறது. பல் வரிசை சரியாக வராமல் போவது, முகவாய் வடிவம் மாறுவது என சில நேரங்களில் முக அழகை கெடுக்கிறது.
ஆனால், குழந்தைகளை இந்த பழக்கத்தில் இருந்து மறக்கடிப்பது என்பது எளிதான காரியம் கிடையாது. காரணம், கை சூப்புவதால் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால், குழந்தைகள் எப்போது விரல் சூப்புகிறார்கள் என்பதை கவனித்தால் இந்த பழக்கத்தை எளிதில் நிறுத்தலாம் என்கின்றனர். அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
- வேப்பிலை வேண்டாம்: பல பெற்றோர்கள் குழந்தைகளின் இந்த பழக்கத்தை போக்க விரல்களில் வேப்பிலை சாற்றை தடவுகின்றனர். இப்படி செய்வதால், குழந்தைகள் சட்டென கவலையடைந்து விடுவதாகவும், இந்த முறை சரியானது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- குழந்தைகளை கவனியுங்கள்: குழந்தைகள் எந்த நேரத்தில் வாயில் விரலை வைக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் தூங்கும் முன்பும், சாப்பிடும் போதும் இந்த பழக்கத்தை செய்கிறார்கள். குழந்தைகள் வாயில் விரலை வைக்கும் சூழ்நிலையை தெரிந்து கொண்டால், அந்த பழக்கத்திலிருந்து விடுபடச்செய்வது சுலபம்.
- திசை திருப்புங்கள்: அதாவது, அந்த நேரத்தில் குழந்தைகளின் கைகளை பிஸியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். பொம்மை, கலர் பென்சில்கள் போன்றவற்றை கொடுத்து அந்த பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கச் செய்யுங்கள்.
- டீத்தர் உதவலாம்: டீத்தர், வாயில் வைத்து மெல்லக்கூடிய பொம்மைகள், வாயில் விரலை வைப்பதில் இருந்து தடுப்பதாக 2019ம் ஆண்டு ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் வெளியிட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் வாயில் விரலை வைக்கும் சந்தர்ப்பங்களில் கைகளால் எதாவது செய்யச் சொல்லி திசை திருப்புவதன் மூலம் இந்த பழக்கத்தைக் கைவிடலாம்.
- சியர்-அப் செய்யுங்கள்: சிறிய இலக்குகளை வைப்பதன் மூலம் இந்த பழக்கத்தை எளிதாகக் கைவிடலாம். குறிப்பிட்ட மணி நேரம் வாயில் விரலை வைக்காமல் இருந்தால், உங்களுக்கு (குழந்தை) பிடித்ததை வாங்கித் தருவதாகச் சொல்லுங்கள். கூடவே, ஒரு நாள் முழுக்க இருந்தால் பெரிய பரிசு வாங்கி தருகிறேன் எனச் சொல்ல வேண்டும்.
- பொறுமை அவசியம்: இந்த முயற்சியில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள்' என்பது தான். குழந்தைகள் ஒவ்வொரு முறையும் வாயில் விரலை வைக்கும் போது கோபம் படாமல் இனிமையாக சொல்ல வேண்டும். குழந்தைகளை அடிப்பது ஒரு போதும் உதவாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில், பொறுமையாக திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அவர்கள் இயற்கையாகவே மாற்றம் அடைவார்கள்.
- மருத்துவர் ஆலோசனை: கடைசியாக.. எத்தனை முறை முயற்சித்தாலும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது. பின்னர் மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறார்கள். அவற்றைப் பின்பற்றுவதன் மூலம், இந்த பழக்கத்தை முறித்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.