சென்னை: "என்ன வெயில் தாங்க முடியலடா சாமி" என சொல்லாத நபர்கள் இருக்கவே முடியாது. தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் அது ஆம்லேட்டாக மாறும் வீடியோக்கள் வைரலாகி வருவது நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் அல்ல, கடந்து ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த வெப்பத்தின் தாக்கம் மிக கொடூரமாக இருக்கிறது.
இந்த வெப்ப அலை தாண்டவமாடும் காலகட்டத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் நிலையில் கண்களுக்கும் பல ஆரோக்கிய சீர்கேடுகள் வர வாய்ப்பு உள்ளது என கூறுகிறார் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் சௌந்தரி. இந்த வெப்ப அலை காரணமாக கண்களுக்கு வரும் நோய்கள் மற்றும் அதை பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து அவர் கூறிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
வெப்பத்தின் காரணமாக கண்களுக்கு வரும் பிரச்சனைகள் என்னென்ன?
- புறஊதா கதிர்வீச்சு பாதிப்புகள்.!
கண் புரை நோய்
விழிப்புள்ளிச் சிதைவு
போட்டோகரட்டாடிஸ்
- ஒவ்வாமை காரணமாக ஏற்படும் பாதிப்பு.!
கண் சிவத்தல்
கண் அரிப்பு
கண்ணில் நீர் வடிதல்
- பொதுவான பாதிப்புகள்.!
உலர்ந்த கண்கள்
கண் காயங்கள்
இவை அனைத்தும் கோடை காலத்தில் கண்களுக்கு வரும் பொதுவான பிரச்சனைகள். இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது கடைகளில் இருந்து கிடைக்கும் மருந்துகளை வாங்கி கண்களில் போட்டுக்கொள்ளாமல் மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும் என்பது மருத்துவர் சௌந்தரியின் அறிவுறுத்தலாக இருக்கிறது.
- சரி இதுபோன்ற கண் தொடர்பான நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
புறஊதா கதிர்வீச்சு பாதிப்புகள்: இதன் காரணமாகத்தான் கண் புரை நோய், விழிப்புள்ளிச் சிதைவு நோய், போட்டோகரட்டாடிஸ் போன்றவை ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த நீங்கள் வெளியே செல்லும்போது sun glass கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் சௌந்தரி தெரிவித்துள்ளார். மேலும், போலரைஸ்டு லென்ஸ்களைக் கொண்ட குளிர் கண்ணாடிகள் சூரிய ஒளி பிரதிபலிப்பை குறைத்து, பார்வைத் தெளிவை மேம்படுத்தக்கூடியவை.
ஆகையால் பொதுமக்கள் இதுபோன்ற புறஊதா கதிர்களிலிருந்து 100% பாதுகாப்பை தரும் sun glass-களை அணியலாம் எனவும் கூறினார். மேலும் குறிப்பாக இந்த விழிப்புள்ளி சிதைவு அல்லது கண் அழுத்த நோய் என்பது ஆரம்ப காலகட்டத்தில் தெரியாமல் இருக்கலாம். அது மெல்ல மெல்ல அதிகரித்து கண் பார்வைக்கு எதிரான பல்வேறு ஆபத்துக் காரணிகளை உருவாக்கும். இதனால், குறிப்பிட்ட இடைவெளியில் கண்களுக்கு பொதுவான பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
ஒவ்வாமை பாதிப்புகள்: வெயில் காலங்களில் கண்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை அலர்ஜி அல்லது ஒவ்வாமை. இதன் காரணத்தால் கண்கள் சிவந்து போகுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்களில் தொடர்ந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் பலர் கண்களை தேய்ப்பதும், கசக்குவதும் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்.
இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என, மருத்துவர் சௌந்தரி தெரிவித்துள்ளார். இப்படி செய்வதால் கண்கள் மேலும் அதீத தொற்றுக்கு ஆளாகும் எனவும், இதற்கு உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பொதுவான பாதிப்புகள்: வெயில் காலங்களில் உடலுக்கு ஏற்படுவதுபோல் கண்களுக்கும் பொதுவான பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் சூடு, நீர் சத்து குறைபாடு, காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கண்களில் காயம் ஏற்படுதல், கண்கள் உலர்ந்து போகுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரும். இதனால் நீங்கள் நீர் சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மேலும், சர்க்கரை மற்றும் கஃபைன் அடங்கிய பானங்கள் உடலின் நீர்ச்சத்தை குறைக்கும் என்பதால் அவைகளை தவிர்ப்பது நல்லது. அது மட்டும் இன்றி, நீங்கள் வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபடுபவரானால் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம் என மருத்துவர் தெரிவித்தார். மேலும், நீர் சத்துக் குறைபாடு காரணமாக கண்ணீர் வராமல் போவதால் கண்களில் வரட்சி ஏற்படும் இதற்கு நம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை. இல்லை என்றால் செயற்கையாக கண்களில் நீர் வர சொட்டு மருந்துகளை பயன்படுத்த நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வேப்பம் பூ" ரசமா? சுவையிலும், பலனிலும் அருமையான ரெசிப்பி.! - How To Make Neem Flower Rasam