சென்னை: 'என்னவென்று தெரியவில்லை ஒரே சோர்வாக இருக்கிறது' என இந்த வாக்கியத்தை பலர் கூறக் கேட்டு இருப்போம். ஏன், நாமும் அந்த நிலைமையில் கூட இருக்கலாம். ஆனால், இந்த வரிகளை அசால்டாக கடந்து விட கூடாது என்கிறது லண்டனின் தேசிய சுகாதார சேவை. மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் தான் நாம் சோர்வாக இருப்பதாகவும் எச்சரிக்கிறது.
சோர்வாக இருக்கக் காரணம்?
தூங்குவதில் பிரச்சனை: ஒவ்வொருவரும் வயதிற்கேற்ப குறிப்பிட்ட மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், முறையாகத் தூங்காமல் அல்லது தூங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டால் நாள்பட்ட சோர்வுக்கு வழிவகுக்கிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கத் தூக்கம் மிக அவசியம்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை: மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை சோர்வாக இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மன அழுத்தம்: காதல், குடும்பம், பணம், வீடு, கல்யாணம் என வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மனத்திற்கு அழுத்தம் கொடுப்பதால் மனதளவில் சோர்வடையச் செய்கிறது. இதனால், உடலும் மனமும் சேர்ந்து சோர்வடைந்து காணப்படுகிறது.
ஹார்மோன் மாற்றங்கள்: பருவமடைதல், கர்ப்பம் அல்லது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஆற்றலைப் பாதித்துச் சோர்வாக இருக்கச் செய்கிறது.
மருத்துவச் சிகிச்சைகள்: உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் போது தற்காலிக சோர்வை ஏற்படுத்தும்.
உடற்சோர்வை ஏற்படுத்தும் மருத்துவக் காரணங்கள்?
- தூங்குவதில் பிரச்சனை
- இரத்த சோகை
- இரும்புச்சத்து குறைபாடு
- நீரிழிவு நோய்
- தைராய்டு
சோர்வை நீக்க என்ன செய்வது?
ஆரோக்கியமான வாழ்க்கை முறை: ஆற்றல் மட்டங்களைப் புத்துணர்ச்சி படுத்த உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் உடற்பயிற்சியை இணைத்துக் கொள்ள வேண்டும்
சீரான தூக்கம்: 6 முதல் 9 மணி நேரத் தூக்கத்தை கட்டாயமாக அனைவரும் பெற்றிருக்க வேண்டும். தினசரி ஒரே நேரத்தில் தூங்கச் செல்வ வேண்டும். நீங்கள் உறங்கும் இடத்தை சுத்தமாகவும், அமைதியாகவும் வைத்துக்கொண்டால் தூக்கம் சீராக வந்து உடல் சோர்வை நீக்க உதவியாக இருக்கிறது. மது, டீ, காபி போன்ற தூக்கத்தைக் கெடுக்கக் கூடிய உணவுகளையும், தூங்குவதற்கு முன் மொபைலை தவிர்க்க வேண்டும்.
மருத்துவர் ஆலோசனை: உரியக் காரணமின்றி சோர்வு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பக் காலத்தில் நோயைக் கண்டறிந்து உரிய மருத்துவ உதவியோடு செயல்படும் போது பின்விளைவுகளைத் தவிர்க்கலாம் என்கிறது லண்டனின் தேசிய சுகாதார சேவை.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.