சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில், செல்லப்பிராணிகளின் சிகிச்சை முறைகளில் நவீன வளர்ச்சி குறித்து, கால்நடை மருத்துவர்களுக்கான தேசிய கருத்தரங்கம் இன்று (பிப்.08) நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் தற்போதைய டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு, கருத்தரங்க மலரை வெளியிட்டார்.
இது குறித்து அவர் பேசுகையில், “செல்லப்பிராணிகள் 4 கால்கள் உடைய நமது வீட்டின் உறுப்பினர்கள். அவைகள் காட்டும் அன்பு உண்மையானது. மேலும், செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போது நமது மன அழுத்தம் குறைகிறது. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி 120 வருடங்கள் பழமையானது.
இம்மருத்துவமனையில் அல்ட்ராசவுன்டு, எண்டோஸ்கோப், CT Scan போன்ற நவீன வசதிகள் உள்ளன. இங்கு சிறுநீரக நோய் இருதய நோய், எலும்பு முறிவு, அவசர சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை போன்ற வசதிகளுடன் உலகத் தரத்தில் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது” என கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய கீதாலட்சுமி, “இந்த கருத்தரங்கில் செல்லப்பிராணிகள், விலங்குகளுக்கு எப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. மனிதனுக்கு என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்வார்களோ, அதே போன்று விலங்குகளுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. செல்லப்பிராணிகளில் இருந்தும் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே அவற்றிற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
பறவைகளில் இருந்து வரும் நோய்த்தொற்றின் மூலம் நுரையீரல் பாதிக்கப்பட்டு, இறப்பும் ஏற்படும் நிலை வருகிறது. தெருநாய்களுக்கு ரேபிஸ் தொற்று அதிக அளவு உள்ளது. அதை தடுக்ககூடிய நடவடிக்கை முக்கியமானது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று அதிக அளவு பரவுகிறது. மனிதனுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள், விலங்குகளுக்கும் ஏற்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கும் உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது” என தெரிவித்தார்.