சேலம்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும், பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து இது குறித்து மகப்பேறு சிறப்பு மருத்துவர் அனுஷா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள், இளம் தாய்மார்கள் மற்றும் விளையாட்டுப் பருவ குழந்தைகள் தங்களை வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் பேசிய விவரங்களைப் பார்க்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் என்னென்ன வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்?
- கர்ப்பிணிப் பெண்கள் காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்.
- நீர்ச் சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
- வழக்கத்தில் இருந்து அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்
- லேசான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
- வெயிலில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- சூட்டு வலி வந்தால் சீரகம் போட்டு தண்ணீர் கொதிக்க வைத்து, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்
- காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம்
இளம் தாய்மார்கள் என்னென்ன வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்?
- தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் பால் சுரக்கும்
- சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்
- பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்
- வெயிலில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
- காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்
இளம் தாய்மார்கள் பச்சிளம் குழந்தையை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும்?
- வெயில் காரணமாகக் குழந்தைக்கு அதிகம் வியர்வை குரு வரலாம், குளிப்பாட்டுவதுடன் வியர்வை அதிகம் ஏற்பட்டால் உடலுக்கு மட்டும் ஈரமான துணியால் துடைத்துக்கொடுக்கலாம். பருத்தி துணியாலான ஆடைகளை அணிந்து விட வேண்டும், தேவைப்படும் பட்சத்தில் அதை மாற்றி விட வேண்டும்
- குழந்தைகளுக்கு ஏ.சி மற்றும் ஏர் குலர் பயன்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால் அதைச் சரியாகச் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்
- காலை, மாலை வீட்டின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து வெளிக் காற்று உள்ளே வந்து செல்லும் வகையில் பார்க்க வேண்டும்
- சூடு அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு டைப்பர் அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்
- குழந்தைகள் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாள் முழுவதும் சிறுநீர் கழிக்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் குழந்தைகளை எப்படிக் கவனிக்க வேண்டும்?
- இவர்களைக் கையாளுவது மிகவும் கடினமான ஒன்று என்பதால் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும்
- வெயில் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்
- குழந்தைகளுக்கு வெயிலின் தாக்கம் குறித்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்
- சன் ஸ்ட்ரோக், வியர்வை குரு உள்ளிட்ட பல உடல்நல உபாதைகள் வரலாம்
- தண்ணீரைப் பாட்டிலில் அளந்து கொடுத்துக் குடிக்க வைக்க வேண்டும்
- குழந்தைகளை எப்போதும் நீரேற்றத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மருத்துவர் அனுஷா வழங்கியுள்ளார். இந்த கோடை வெயிலின் தாக்கம் முடியும் வரை அனைவரும் பாதுகாப்புடன் இருந்து ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள முதியவர்களும் இதுபோன்ற வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுங்கள்.
இதையும் படிங்க: டெங்கு பாதிக்கப்பட்ட கர்ப்பிணி.. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்: ஆய்வில் தகவல்.! - Pregnant Women Infected With Dengue