சென்னை: அஸ்ட்ரஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலருக்கு உடல் ரீதியாக பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பான வழக்கில் அஸ்ட்ரஜெனகா நிறுவனம் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மிகவும் அரிதாக ஒரு சிலருக்கு த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) அதாவது ரத்த உறைதல் எனப்படும் பக்கவிளைவு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்ட மக்கள் பலர் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஊசி போட்டுக்கொண்டதால் நமக்கும் ரத்த உறைதல் உள்ளிட்ட ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமோ என உயிர் பயத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து சென்னை ரெய்லா மருத்துவமனையின் மருத்துவர் அஷோக் குமார் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்ட நபர்களில் லட்சத்தில் ஒருவருக்கே பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தேவையற்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் மாரடைப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் பொதுவாக இருக்கும் சூழலில், கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்ட நபர்களுக்குதான் இதுபோன்ற ஆபத்துக்கள் வருவதாக எந்த ஆய்வும் குறிப்பிடவில்லை எனவும் கூறியுள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பூசியால் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்ததாகவும், இதனோடு பக்கவிளைவு பாதிப்புகளை ஒப்பிடுகையில் அது அரிதிலும் அரிதாக ஒரு சிலருக்கே ஏற்பட வாய்ப்பு என அசோக் குமார் கூறியுள்ளார். மேலும், பலருக்கு உடல் உழைப்பு இன்மை. மது பழக்கம், முறையற்ற உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பலவற்றால்தான் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருவதாகவும், அதை கோவிஷீல்டு தடுப்பூசியுடன் தொடர்பு படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் இதன் மீதாக ஏற்பட்டுள்ள அச்சத்தில், அதை யோசித்து யோசித்து வரும் மன ரீதியான பாதிப்புகளே அதிகம் எனவும், கோவிஷீல்டு தடுப்பூசி பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம் எனவும் மருத்துவர் அசோக் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் வருமா? அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கூறுவது என்ன? - Covishield Vaccine Side Effects