ஹைதராபாத்: "நாட்டில் உள்ள கண் பார்வையின்மையை அகற்றுவதே எங்களது நோக்கம்" எனகிறார் எல்வி பிரசாத் நேத்ரா வைத்யா விக்யான் இன்ஸ்டிடியூட் (LVPEI) நிறுவனத்தின் தலைவர் டாக்டர் குல்லப்பள்ளி நாகேஸ்வர ராவ் (Dr GN Rao).
கண் மருத்துவ உலகில் புதிய சாதனைகளையும், முயற்சியையும் கடந்த மூன்று தசாப்தங்களாக படைத்து வரும் எல்விபிஇஐ, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்னியா மாற்று சிகிச்சைகளை செய்து உலக சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், எல்விபிஇஐயின் செயல் தலைவர் டாக்டர் குல்லப்பள்ளி நாகேஸ்வரராவ், பிரசாந்த்கார்க், அமைப்பின் ஒரு அங்கமான சாந்திலால் சங்வி கார்னியா இன்ஸ்டிடியூட் இயக்குநர் டாக்டர் பிரவீன் வட்லவள்ளி ஆகியோர் வியாழக்கிழமை ஈடிவி பாரத் ஊடகத்திடம் பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.
கார்னியா சேகரிப்பில் மூன்றாவது இடம்:
"கடந்த 35 ஆண்டுகளில் 1.2 லட்சம் கார்னியாக்களை சேகரித்துள்ளோம். அந்த வகையில், ஆசியாவில் முதலிடத்திலும், உலகில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறோம்" என பெருமிதத்துடன் கூறுகிறார் டாக்டர். ஜி.என் ராவ். "50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவிழி சிகிச்சைகளை செய்து உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்தது பெருமைக்குரியது.
LVPEIல், மாற்று அறுவை சிகிச்சையுடன் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு கார்னியாக்களை வழங்குகிறோம். 43.72 சதவீத மாற்று சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டன. ஆண்களை விட பெண்களுக்கு பார்வை இழப்பு பாதிப்பு ஒன்றரை மடங்கு அதிகம்" என்றார்.
கண்களில் பால் ஊற்ற வேண்டாம்:
"இன்றளவும் கிராமப்புறங்களில், கண்கள் சிவந்து காணப்பட்டால் பால் ஊற்றும் பழக்கம் உள்ளது. இத்தகைய சுய சிகிச்சை முறை தான் கார்னியல் நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. காயம் ஏற்பட்டால், அதைப் சாதரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கார்னியல் பிரச்சனைகளுக்கு 5% முதல் 7% வரை இரத்தம் சார்ந்த திருமணங்களே காரணமாகின்றன.
தொழிற்சாலைகள், மாசுபாடு, கவனக்குறைவாக பொருட்களை எரிக்கும் போது மற்றும் கண்புரை அறுவை சிகிச்சையில் ஏற்படும் பிழைகள் போன்ற காரணங்களால் கார்னியா சேதமடைகிறது. கிராமப்புறங்களில், கண் முகாம்கள் மூலம் மக்களுக்கு கண் பிரச்சினைகள் கண்டறியப்படுகின்றன. எதிர்காலத்தில் தொலைதூர கிராமங்களுக்கும் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது" என்றார்.
அடுத்த 3 ஆண்டுகளில் செயற்கை கார்னியா:
3டி தொழில்நுட்பம் உதவியுடன் செயற்கை கார்னியாவை உருவாக்கியுள்ளோம். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும். இதற்கு, குறைந்தது மூன்று வருடங்கள் ஆகலாம். கர்னியாவுக்காக நாடு முழுவதும் 6 மாதங்களாக காத்திருப்போரின் பட்டியல் உள்ளது. AI மூலம், மயோபியா- கிட்டப்பார்வை பிரச்சனை (தொலைதூர பொருட்களை தெளிவாக பார்க்க இயலாமை) குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்படலாம்.
சிகிச்சையில் நீங்கள் சந்திக்கும் சில சவால்கள் என்ன? அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் என்ன?
"மாற்று அறுவை சிகிச்சைக்கு பிந்தய வெற்றி விகிதத்தை மேம்படுத்துவது தான். சிகிச்சை மேற்கொண்ட பலர், அதனை தொடர்ந்து கண்காணிப்பது கிடையாது. சிகிச்சைக்கு பின்னர் கண்காணிப்பு இல்லை என்றால், தோல்விக்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, இதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் அவர்கள் மருத்துவர்கள் வழங்கும் மருந்துகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும். அது செய்யப்படாவிட்டால், மாற்று அறுவை சிகிச்சை செய்வதால் எந்த பயனும் இல்லை என்றார்.
இந்தியாவில் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் என்ன?
"பொதுவாக, அனைத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளிலும், கார்னியா அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது" என்கிறார் LVPEI-ன் செயல் தலைவர் டாக்டர் பிரசாந்த் கார்க். முக்கியமாக, கார்னியா அதன் ஊட்டச்சத்தை கண்ணின் உட்புறத்திலிருந்தும் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனிலிருந்தும் பெறுகிறது.
இதன் காரணமாகவே, நாம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கார்னியாவை இடமாற்றம் செய்யும் போது, உடல் அதை ஒரு அந்நியப் பொருளாக பார்ப்பது கிடையாது. கார்னியா மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் 96 முதல் 97 சதவீதமாக இருக்கிறது. கருவிழி மாற்று சிகிச்சை மூலம் பார்வையின்மையை குணப்படுத்தலாம்.
கண் பிரச்சினைகள் உள்ளவர்களில் யாருக்கு கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை தேவை?
எங்களிடம் பல பரிமாண அணுகுமுறை உள்ளது. முதல் அணுகுமுறை கார்னியல் மாற்று சிகிச்சையின் தேவையை குறைப்பதாகும். நோயறிதலுக்குப் பிறகு சரியான தலையீடு மற்றும் ஆரம்பகால சிகிச்சையானது, பல நோயாளிகள் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையை அடைவதைத் தடுக்கலாம். மாற்று அறுவை சிகிச்சை செய்தால், வாழ்நாள் முழுவதும் நாம் தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் கார்னியல் கண் வங்கியை நிர்வகிக்கிறீர்கள். நிர்வாகம் சந்திக்கும் சவால்கள் என்ன?
எல்விபிஇஐ நிறுவனத்துடன் தொடர்புடைய சாந்திலால் சங்வி கார்னியா இன்ஸ்டிடியூட் இயக்குநர் டாக்டர் பிரவீன் வடவள்ளி கூறுகையில், "நாட்டில் சுமார் 200 கண் வங்கிகள் உள்ளன. ஆனால் அவற்றில் 90 சதவீதம் செயல்படவில்லை. நாட்டில் சேகரிக்கப்பட்ட 60,000 கார்னியாக்களில், 70 சதவிகிதம் 10 கண் வங்கிகளில் மட்டுமே சேகரிக்கப்படுகிறது.
கண் வங்கிகளைத் தொடங்கும் பலர் மனித வளங்களைப் பயிற்றுவிப்பதில் முதலீடு செய்வதில்லை. அவர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிப்பதில்லை. எனவே, கண் வங்கிகளின் செயல்பாடுகள் குறைந்த பயிற்சி பெற்ற அல்லது பயிற்சி பெறாதவர்களின் கைகளுக்குச் சென்று, அதன் மூலம் சிக்கல்களை உருவாக்குகிறது".
LVPEI மற்ற மாநிலங்களுக்கு கண் வங்கிகள் அமைக்க உதவுவதாக அறிந்தோம். இந்த எவ்வாறு செயல்படும்?
"நாங்கள் ஆர்பிஸ் (Orbis) இன்டர்நேஷனலுடன் (பார்வையின்மையை தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பணிபுரியும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு) இணைந்து நீண்ட காலத்திற்கு முன்பே இந்த பயணத்தைத் தொடங்கினோம்," என்றார். 2017ல், தி ஹான்ஸ் அறக்கட்டளை, நாட்டில் பல மாநிலங்களுக்கு கார்னியல் திசு தேவைப்படுகிறது, ஆனால் அதற்கு கண் வங்கிகள் இல்லை, என்பதை சுட்டிக்காட்டியது.
எனவே அறக்கட்டளையுடன் இணைந்து பொறுப்பேற்றோம். ரிஷிகேஷ்,குவஹாத்தி,பாட்னா, ராஞ்சி போன்ற பல இடங்களில் கண் வங்கிகள் அமைத்துள்ளோம்.மேலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இதே மாதிரியான கண் வங்கிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
LVPEI நிறுவனர் டாக்டர் குல்லப்பள்ளி நாகேஸ்வர ராவ் உடனான கேள்வி நேரத்தில்..
கார்னியல் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு உளவியல் ஆலோசகர் (Grief Counsellor) அமைப்பைத் தொடங்கியுள்ளீர்கள். அது எவ்வாறு செயல்படுகிறது?
"இது, மிகவும் கடினமான நேரங்களில் குடும்பங்களுடன் பேசுவதற்காக பயிற்சியளிக்கப்படுகிறது. மருத்துவமனையில், குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தால், நாங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்குகிறோம். கார்னியல் தானம் மற்றும் அவர்களின் பங்களிப்பு எப்படி இரண்டு பேருக்கு பார்வை தருகிறது என்பதைப் பற்றி அவர்களிடம் பொருமையாக கூறுகிறோம். இவை அனைத்தும் கவனமாகவும் அனுதாபத்துடனும் செய்யப்பட வேண்டும். இதைத்தான் நாங்கள் எங்கள் உளவியல் ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இவர்கள், மருத்துவமனையில் முழு நேரமாக இருப்பார்கள்"
இந்தியாவில் திறமையான கண் மருத்துவர்கள் இருக்கிறார்களா?
"லண்டன் மற்றும் பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 80,000 முதல் 100,000 திறமையான மருத்துவர்கள் உள்ளனர். கண் சிகிச்சையில் நாம் பல நாடுகளை விட முன்னணியில் இருக்கிறோம். தற்போது, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான (8 மில்லியன்) கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம். இது 90களில் 1 மில்லியனாக இருந்தது, கடந்த மூன்று தசாப்தங்களில் அது எட்டு மடங்கு அதிகரித்துள்ளது"
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவிலும் மயோபியா (Myopia) வழக்குகள் அதிகரித்து வருகின்றன..அதற்கான காரணங்கள் என்ன?
"மொபைல், கம்ப்யூட்டர் புத்தகம் என கண்களுக்கு அருகில் வைத்து நாம் பார்க்க கூடிய வேலைகளே கிட்டப்பார்வை வருவதற்கான முக்கிய காரணம். அதுமட்டுமல்லாது, குறைவான வெளிப்புற நடவடிக்கைகளும் மற்றொரு காரணமாக அமைகிறது. திரை நேரத்தை குறைத்து வெளியில் நேரத்தை செலவிடவேண்டும். சிங்கப்பூரில் இயற்கை வெளிச்சம் வரும் வகையில் கண்ணாடிச் சுவரால் ஆன பள்ளிகள் உள்ளன. எங்கள் மருத்துவமனையில், குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது"
கடைசியாக, சமூகமாக நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்?
"குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால், அவர்களது கண்களை தானமாக கொடுக்கலாம். இல்லையென்றால், சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவலாம். நாம் இறந்த பின்னர், நமது உடல் புதைக்கவோ, எரிக்கவோ படுகின்றன. ஆனால், அதற்கு முன்னதாக நம் உடல் செய்யக்கூடிய உதவி ஏராளம் என்பதை நினைவில் வைக்கவேண்டும். கிராம மற்றும் நகர்ப்புறங்களில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்"
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்