சென்னை: ஆந்திராவில் தலசீமியா என்ற ரத்த அழிவுச் சோகை, அதாவது சிவப்பு ரத்த அணுக்களில் ஹூமோகுளோபின் குறைபாடு உள்ள 25 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 'அநாமயா' (ANAMAYA) என்ற திட்டத்தை எம்ஜிஎம் மருத்துவமனை துவக்கி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை மருத்துவப் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செயல்திட்டங்களை எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்தியது. இதில், தலசீமியா மற்றும் பிற ரத்த சோதனைகள் 5,000 குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது.
இந்தப் பரிசோதனையில் தலசீமியா பாதிப்புள்ள 25 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில், இந்த குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சைக்காக சப்தா பவுண்டேஷன் மூலம் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டும் ஏறக்குறைய 10,000 நபர்கள் தலசீமியா மேஜர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
தலசீமியா நோய் பாதிப்பு என்றால்?: தென்னிந்தியாவில் கணிசமான அளவு காணப்படுகின்ற தலசீமியா (Thalassemia) எனப்படும் ரத்த அழிவுச் சோகை என்பது, சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கின்ற ஒரு மரபியல் கோளாறாகும். இந்தியாவில் ஏறக்குறைய 1,00,000 நோயாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலசீமியா குறித்து குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல், ரத்தம் மற்றும் மஜ்ஜை மாற்று சிகிச்சை துறைத் தலைவர் தீனதயாளன் கூறும்போது, "தலசீமியா என்ற ரத்த அழிவுச்சோகை, இந்தியாவில் அதுவும் குறிப்பாக தென்மாநிலங்களில் கவலையளிக்கின்ற ஒரு பொது சுகாதார பிரச்னையாக இருக்கிறது. தேசிய அளவில் ஏறக்குறைய 3-4 சதவீதம் என்ற அளவிற்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் இருப்பதாக தெரிகிறது.
தீர்வு என்ன? இந்த நாேயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி ரத்தமேற்றல், இதயம் மற்றும் கல்லீரல் போன்ற மிக முக்கிய உறுப்புகளில் இரும்புச்சத்தின் மிகைச்சுமை ஆகியவற்றின் காரணமாக, பெரும்பாலான குழந்தைகள் 15 ஆண்டுகள் வயதைக் கடந்து உயிர் வாழ்வதில்லை. தற்போது, தலசீமியா நோய்க்கு ஒரே நிரந்தரத் தீர்வாக இருப்பது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தான்.
இந்த சிகிச்சைக்குப் பிறகு தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இயல்பான வாழ்க்கையை மற்றவர்களைப் போல வாழ முடியும். குறிப்பாக, ரத்த உறவில் திருமணம் செய்யும் குடும்பங்களில் அல்லது பழங்குடியின மக்கள் மத்தியில் இந்த நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
குழந்தைகளில் தலசீமியா, பிற ரத்த சீர்கேடுகள் மற்றும் புற்றுநோய்கள் பாதிப்பைக் கண்டறிவதற்கான அடிப்படை சோதனை (ஸ்க்ரீனிங்), அடையாளம் காணுதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்கு அணுகும் வசதியை ஏற்படுத்த முடியும். வாழ்நாள் முழுவதும் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் நோய் பாதிப்புள்ள நபர்களைக் கண்டறிவதற்கான ஸ்க்ரீனிங், குழந்தை பிறப்பிற்கு முன்பு நோயறிதல் சோதனை மற்றும் மரபியல் சார்ந்த ஆலோசனை வழங்கப்படுகிறது.
எப்போது கண்டறியலாம்? தலசீமியா என்பது, பிறந்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் அடையாளம் காண முடியும். பிறப்பிலேயே ஒரு மரபியல் கோளாறாக இது இருக்கிறது. முக்கியமாக, நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெறும் திருமண பந்தமானது, இந்நோய் பாதிப்புள்ள குழந்தைகள் பிறப்பதற்கு வழிவகுக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன், திரும்பத் திரும்ப ரத்தமேற்றல் மற்றும் ஆதரவு சிகிச்சை என்பது மட்டுமே வழக்கமான சிகிச்சையாக இருக்கிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற குழந்தைகளுக்கு செய்ய முடியும். ஆந்திராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.