சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனை நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தில் சிறந்து விளங்குவதை எடுத்துக்காட்டும் வகையில், இன்று 6,000க்கும் அதிகமான ரோபோடிக் மருத்துவ நடைமுறைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது.
கடந்த 2011ஆம் ஆண்டில் தனது முதன்மை மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாக ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர்.பிரதாப் சி ரெட்டி கூறும்போது, “இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சையில் சிறிய கீறல் மூலமாக சிகிச்சைகள் நடைபெறுகிறது. இதனால் வலி அவ்வளவாக இருக்காத நிலையில், விரைவாக குணமடையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
மேலும், இந்த ரோபோடிக் கருவி மூலம் சிறுநீரக அறுவை சிகிச்சை, பெருங்குடல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, குழந்தை நல அறுவை சிகிச்சை, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகளில் செய்யும் அளவிற்கு சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பமாகும்.
தற்போது அப்போலோ 6,000க்கும் அதிகமான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது. அப்போலோ மருத்துவமனைகளில் உள்ள எங்களது மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு நன்றிகள். ரோபோடிக் அறுவை சிகிச்சையானது, எங்களுடைய மருத்துவ சேவைகளை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. எங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறப்பான பலன்களையும், குறுகிய காலத்தில் பெற்று விரைவில் மீண்டு வரும் வாய்ப்புகளையும் அளித்துள்ளது.
அப்போலோ இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான தரத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போலோ மருத்துவமனையின் அடுத்தகட்டமாக ரோபோடிக் அறுவை சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு மூலம் டெலிமெடிசனில் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்யவும் திட்டமிட்டு வருகிறோம். இதில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை குறைந்த செலவில் அளிக்க வழிவகுக்க உள்ளோம். எனவே, வரும் காலத்தில் புற்றுநோய் மருத்துவமனையை பிற மாநிலங்களில், துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, “அப்போலோ மருத்துவமனை சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கிறது. இங்கு நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பை வழங்குவதற்கும், எங்களுடைய திறன்களை மேம்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்” என்றார்.
மேலும் ரோபாேடிக் அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் யூசப், ராகவன் ஆகியோர் கூறும்போது, “இருதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் செய்யும் போது அவர்களுக்கு வலி இல்லாமல், ரத்தம் அதிகம் வெளியேறாமல் செய்ய முடியும். உடலில் சிறிய துளையின் மூலம் செய்யப்படும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகளில் காயம் எளிதில் குணமடையும். அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் அன்றே நடக்க முடியும். மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்கி இருக்க வேண்டியதில்லை” எனத் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோமா நிலையில் இருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை.. சென்னை எம்ஜிஎம் மருத்துவர்கள் அசத்தல்!