சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த மாதம் விஜய் நடிப்பில் 'கோட்' திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து வெளியான படங்களில் 'லப்பர் பந்து' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது வரை திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில் நாளை (அக்.10) த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகிறது.
இப்படத்தில் மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டக்குபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேட்டையன் படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினியின் திரைப்படம் வெளியாவதால் வேட்டையன் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் 'அநீதியை நீதியால் தான் வெல்ல முடியும், இன்னொரு அநீதியால் அல்ல' என்ற அமிதாப்பச்சனின் வசனமும், 'அநியாயம் நடக்கிறப்ப போலீஸ் அமைதியா இருக்கிறதை விட, அதிகாரத்தை கையில் எடுக்கறது தப்பு இல்ல ஜட்ஜ் சார்' என ரஜினிகாந்த் பேசும் வசனமும், இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்கள், நேர் எதிர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு பல எதிர்பார்ப்புகளோடு வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: 'வேட்டையன்' படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் அக்டோபர் 11ஆம் தேதி நடிகர் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் சயின்ஸ் ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 'பிளாக்' திரைப்படமும், கன்னடா நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கியுள்ள 'மார்டின்' திரைப்படமும் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்