சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஹிந்தி மொழியில் வெளியாகிறது.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி வெளியான தங்கலான், சாக்னில்க் இணையதள தகவலின்படி, இதுவரை இந்திய அளவில் 42.80 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் மொத்தமாக 65 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.
அதேபோல் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வெளியான ’டிமாண்டி காலனி 2’ படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் ’டிமாண்டி காலனி 2’, முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தின் திரைக்கதை மற்றும் பின்னணி இசையமைப்பு ரசிகர்களுக்கு திரையரங்குகளில் நல்ல அனுபவத்தை தருவதாக விமர்சனங்கள் வெளியானது.
இதனால் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டிமாண்டி காலனி 2 வெளியான 11 நாட்களில் இதுவரை இந்திய அளவில் 28.30 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் உலக அளவில் 37 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் அருள்நிதி இதுவரை நடித்த படங்களில் டிமாண்டி காலனி 2 அதிக வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள நடிகைகள்.. தமிழ் நடிகைகளுக்கு மவுசு குறைவா? - Malayalam actress in tamil cinema