சென்னை: இன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோர் பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் சினிமாத் துறைக்கு வருவதற்கு முன்பு அல்லது முதல் படத்தில் மிகவும் சொற்பமான அளவில் சம்பளம் பெற்று, பின்னர் தங்களது நடிப்பு திறமையால் உயர்ந்துள்ளனர்.
சமீபத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' திரைப்பட ப்ரமோஷனில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பணக் கஷ்டம் குறித்து பேசியுள்ளார். அதில், நடிகர் சூர்யா தான் கார்மெண்ட் கம்பெனியில் வேலை செய்ததாகவும், அப்போது முதலில் எனக்கு 15 நாளைக்கு 750 ரூபாய் சம்பளம் கிடைத்ததாகவும், பின்னர் அது மாத சம்பளமாக 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
‘நமது வாழ்க்கை எந்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் மாறும்’ எனக் கூறிய சூர்யா தனது குடும்பத்தில் ஏற்பட்ட பணக் கஷ்டம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “நான் ஒரு நாள் சாப்பிட்டு கொண்டிருந்த போது என் அம்மா 25000 ரூபாய் கடன் பெற்றதாக தெரிவித்தார். அந்த விஷயம் என் அப்பா சிவக்குமாருக்கு தெரியாது. அவர் ஒரு நடிகராக இருந்தும், எங்கள் குடும்பத்தில் பணக் கஷ்டம் இருந்தது.
எங்களது அம்மா வங்கி கணக்கில் ஒரு லட்ச ருபாய்க்கு மேல் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் எனது அப்பா சிவக்குமார் தொடர்ச்சியாக ஆறு மாதத்திற்கு மேல் பட வாய்ப்புகள் இல்லை. எனது அம்மா கடன் பெற்ற நேரத்தில் தான் எனக்கு இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் ஒரு பட வாய்ப்பு வந்தது. அப்போது அந்த படத்தில் நடித்து 25000 சம்பளம் பெற்று எனது அம்மாவின் கடனை அடைத்தேன். கடனை அடைப்பதற்காக தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன்” என கூறியுள்ளார்.
இதேபோன்று தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பெற்ற முதல் சம்பளம் குறித்து பார்ப்போம்
ரஜினிகாந்த்: சினிமாவில் 50 வருடங்களாக சூப்பர்ஸ்டாராக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள ரஜினிகாந்த், கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கையை தொடங்கினார். கர்நாடகா போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்த ரஜினிகாந்த், 750 சம்பளத்தில் வேலை பார்த்துள்ளார்.
அவ்வப்போது மேடை நாடகங்களில் நடித்து வந்த ரஜினி, சினிமாவில் அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே ஆகிய படங்களுக்காக 3000 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். பின்னர் ’ப்ரியா’ திரைப்படத்தில் 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். தற்போது இந்திய இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் உள்ளார்.
கமல்ஹாசன்: குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் ஆறு வயதில் ’களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடித்தார். அப்போது அவர் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் என கூறப்படுகிறது. தனது முதல் படத்திற்காக ஜனாதிபதியிடம் தங்கப் பதக்கம் பெற்றார். மேலும் 1994இல் வெளிவந்த படத்திற்காக 1 கோடி சம்பளம் வாங்கிய இந்திய நடிகர் என்ற சாதனையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
விஜய்: நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். விஜய் குழந்தை நட்சத்திரமாக அவர் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெற்றி' என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறு வயது விஜயகாந்தின் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். அப்படத்திற்காக விஜய் 500 ரூபாய் சம்பளம் வாங்கியதாக எஸ்.ஏ.சந்திரசேகர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
அஜித்: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் அப்பரன்டிசாக ஆறு மாதம் பணிபுரிந்த அஜித்குமார், பின்னர் தனது தந்தையின் விருப்பத்தின் பேரில் கார்மெண்ட் கம்பெனியில் பணிபுரிந்தார். இதனிடையே அவ்வப்போது மாடலிங் துறையிலும் ஈடுபாடு காட்டினார். அப்போது ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் விளம்பர படப்பிடிப்பின் போது அஜித்குமாரின் திறமையை கண்டறிந்தார். அதனைத்தொடர்ந்து அஜித்குமார், ‘என் வீடு, என் கணவர்’ என்ற படத்தில் ஒரு நிமிட காட்சியில் நடித்தார். அந்த படத்திற்காக 2500 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: “THIS IS THE FACE OF THE INDIAN ARMY” வெளியானது சிவகார்த்திகேயனின் “அமரன்” பட டிரெய்லர்!
சமந்தா: பிரபல நடிகை சமந்தா தனது முதல் வேல மற்றும் சம்பளம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமந்தா 10ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்காக 500 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் சமந்தா, ’பாணா காத்தாடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்