சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், நடிகர் விஜய். இவரது படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (GOAT) என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
தற்போது, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், சினிமாவில் இனி நடிக்கப் போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கோட் படத்தைத் தொடர்ந்து ஒரு படம் மட்டுமே விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் என பல பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது மற்றொரு இயக்குநரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
அதாவது, இயக்குநர் எச்.வினோத் விஜய்யின் கடைசி படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் துணிவு படத்திற்குப் பிறகு கமல் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான கதை அமைக்கும் பணிகளில் அவர் பல மாதங்கள் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் திடீரென மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் எ நடிகர் தனுஷை வைத்து சதுரங்க வேட்டை படத்தைப் போல, ஒரு சர்வதேச ஏமாற்றுக்காரன் பற்றிய கதையில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார்.
இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் எச்.வினோத் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்தான் விஜய் தரப்பில் இருந்து இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எச்.வினோத் ஏற்கனவே விஜய்க்கு ஒரு அரசியல் கதையைச் சொல்லியிருந்தார்.
அது முழுவதும் மத்திய அரசை விமர்சிக்கும் அரசியல் கதையாக அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. முன்னதாக விஜய் இக்கதையில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால், மீண்டும் அந்த கதையில் நடிக்க விஜய் விரும்புவதாகத் தெரிகிறது.
இதனால் அப்படத்தையும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மூலமாகவே தயாரிக்க எச்.வினோத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
இதையும் படிங்க: விஜயின் இடத்தை நிரப்பும் முனைப்பில் சிவகார்த்திகேயன்? பின்னணி என்ன?