சென்னை: இயக்குநர் மணிரத்னம் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். இவரது இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பு பெற்றது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசனை வைத்து "தக் லைஃப்" என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படம் கமல்ஹாசனின் 234வது படமாக உருவாகி வருகிறது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் "நாயகன்" படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது. கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பதால், படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவியின் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், இருவரும் படத்திலிருந்து விலகிவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது துல்கர் சல்மான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சிம்பு ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர்கள் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஷ்மிகாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்… மனம் திறந்த விஜய் தேவரகொண்டா! - FAMILY STAR VIJAY DEVARaKONDA