சென்னை: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி, சிங்கம் புலி, ஒளிப்பதிவாளர் நட்டி, அனுராக் காஷ்யப் ஆகியோரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
மேலும் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோரால் பெரிதும் பாராட்டப்பட்டது. 'குரங்கு பொம்மை' மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்திலன் சுவாமிநாதன், மகாராஜா மூலம் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதுமட்டுமின்றி ஒடிடியில் வெளியாகி உலக அளவில் பாராட்டை பெற்றது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் 5வது இடம் பிடித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக நடித்த சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில், அவரது 50வது படமாக மகாராஜா பெரும் வெற்றி பெற்றது.
மகாராஜா படத்தின் மூலம் இந்தியா அளவில் பிரபலமடைந்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், தனது அடுத்த படத்தில் நயன்தாராவை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ‘மகாராணி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்.. டெக்னாலஜியின் நாயகன் கடந்து வந்த பாதை! - 65 years of kamal haasan