சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, கட்ட குஸ்தியான உடல் கட்டமைப்பு கொண்ட ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபெக்காவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் இன்று தீபாவளிக்கு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் டீஸர், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான கமல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலிக்கும் படத்தை பார்க்க அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று முதலமைச்சர் நேற்று இரவு அமரன் திரைபடத்தை பார்த்தார்.
நண்பர் கலைஞானி @ikamalhaasan அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று #அமரன் திரைப்படம் பார்த்தேன்.
— M.K.Stalin (@mkstalin) October 31, 2024
புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது… pic.twitter.com/ivp6OrHufb
இது குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “நான் அமரன் திரைபடத்தை பார்த்தேன். புத்தகங்களைப் போல் திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ளார் இயக்குநர். மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய சிவகார்த்திகேயனுக்கும், சாய் பல்லவிக்கும் வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும், நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பிக் சல்யூட்” என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: "அமரன் படத்தின் விளம்பரத்துக்கு கமல் பெயரை பயன்படுத்த மாட்டேன்" - இயக்குனர் ராஜ்குமார் திட்டவட்டம்!
வெளியானது அமரன் திரைப்படம்: தீபாவளியான இன்று ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தை காலை முதலே சென்னையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அமரன் படத்திற்கு அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அமரன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் அமரன் திரைப்படம் பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமரன் படத்தை நேரம் ஒதுக்கி பார்த்ததற்கு நன்றி. படம் முடியும் போது ரொம்ப எமோஷனலாக இருந்தது. நல்ல படத்தை எல்லோரும் கொடுத்திருப்பதாக என்னை, இயக்குனர், சாய் பல்லவி, இசை அமைப்பாளர், ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோரை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார்”.
“முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு பெருமையாக உள்ளது. நம்மூரில் இருந்து ஒரு ராணுவ வீரர் அங்கு சென்று பெரிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதால் நேரம் ஒதுக்கி பார்த்துள்ளனர். இது போன்ற படங்கள் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்