சென்னை: வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் - ஐசரி கணேஷ் தயாரித்து, இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம், சிங்கப்பூர் சலூன். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தின் வெற்றி விழா, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, சின்னி ஜெயந்த், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் கோகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆர்ஜே பாலாஜி, “எங்கள் வாழ்க்கையில் இப்படியொருவர் வரமாட்டாரா என்று ஏங்க வைத்தது என்றால், அதற்கு காரணம், அரவிந்த் சாமி. எங்களுக்காக அந்த கதாபாத்திரம் பண்ணியதாக நன்றி தெரிவித்தவர், வெளியில் எங்கும் நான் நடித்ததை சொல்லக் கூடாது என சொல்லியிருந்தார்.
இந்த வெற்றி விழா ஒரே மாதிரியாக இல்லாமல், இந்த படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. கடந்த வாரம் ரிலீஸ் ஆகி அதிக கலெக்ஷன் கொடுத்தது. ப்ளூ ஸ்டார் படத்துக்கும் வாழ்த்துக்கள். யூடியூப், பேஸ்புக் போன்ற தளங்களில் ட்ரோல் பன்னுவாங்க, ஆனால் இப்போ என் கூட இருக்கிறவர்களே என்னை ட்ரோல் பன்றாங்க. முதலில் சின்னி ஜெயந்த், என்னை தென்னிந்தியாவின் அமீர் கான் என்று அழைத்தார். அதை பார்க்கும்போது எனக்கே சிரிப்பு வருகிறது” என பேசினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சின்னி ஜெயந்த், “ஆர்ஜே பாலாஜி, இன்னும் நீங்கள் தமிழக மக்களிடையே சின்ன குழந்தையாகத்தான் இருக்கீங்க, எல்லாரும் எல்.கே.ஜி ஹீரோன்னுதான் சொல்றாங்க. அவ்வளவு பிரபலமாகி இருக்கிறார். இதுவரை எந்த வெற்றி விழாவுக்கும் நான் போனதில்லை. இதுதான் முதல் முறை” என்றார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “கடந்த வாரம் இந்த படம் வெளியானபோது தியேட்டர்களில் நல்ல வரவேற்பு மற்றும் வசூல் கிடைத்தது” என தெரிவித்த அவர், இயக்குநர் கோகுலுக்கு தங்கச் செயினைப் பரிசளித்தார்.
இந்த படத்தில் என்னால் நடிக்க முடியுமா, இதுவரை ஜாலியாகத்தான் நடித்திருந்தேன் என்று சொன்னதாகவும்,, ஆர்ஜே பாலாஜியாலும் இப்படியால் நடிக்க முடியுமா என்று நிரூபித்ததாகவும், இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ரோபோ சங்கர் நல்லா ஸ்கோர் பண்ணிட்டாங்க என்றும் ஐசரி கணேஷ் வாழ்த்தினார்.
வேல்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் இயக்குநர் கோகுல் மீண்டும் இணைகிறார். அது குறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்றும், இந்த வருடம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் குறைந்தது 6 படங்கள் ரிலீஸ் ஆகும் எனவும் கூறினார். அதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: ராசி இல்லாதா நடிகர்களா?... 'ப்ளூ ஸ்டார்' படம் மூலம் புத்துயிர் பெற்ற நடிகர்கள்!