சென்னை: இயக்குநர் செல்வராகவன் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று(டிச.13) வெளியாகிறது. பிரபல இயக்குநர் செல்வராகவன் ’துள்ளுவதொ இளமை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் தனது தம்பி தனுஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் இயக்கிய '7G ரெயின்போ காலனி', 'காதல் கொண்டேன்' திரைப்படங்கள் இன்று வரை காதல் ஜோடிகளின் காவியமாக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து தனுஷை வைத்து அவர் இயக்கிய 'புதுப்பேட்டை' திரைப்படம் கல்ட் கிளாசிக் திரைப்படமாக ரசிகரகள் மனதில் இடம்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து கார்த்தி, ரீமாசென் உள்ளிட்டோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' ரிலீசான சமயத்தில் வெற்றி பெறாத நிலையில், பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து தனுஷ் நடிப்பில் 'மயக்கம் என்ன', ஆர்யா நடித்த 'இரண்டாம் உலகம்', சூர்யா நடித்த 'என்ஜிகே', எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை', தனுஷ் நடித்த 'நானே வருவேன்' ஆகிய திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமரசனங்களை பெற்றுள்ளது.
செல்வராகவன் இயக்கிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும், காலம் கடந்து கிளாசிக் திரைப்படமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. parellel universe pictures தயாரிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். செல்வராகவன் இயக்கிய 'மயக்கம் என்ன' திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன், ஜிவி பிரகாஷ் கூட்டணி இணைகிறது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜிவி பிரகாஷ் இந்த வருடம் நடித்த ’செல்ஃபி’ (selfie) திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்த வருடம் ஜிவி பிரகாஷ் இசையமைத்த கேப்டன் மில்லர், தங்கலான், அமரன் பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: வெளியானது 'கூலி' படத்தின் பாடல் வீடியோ.. ரசிகர்களுக்கு ரஜினியின் பர்த்டே ட்ரீட்! - RAJINIKANTH BIRTHDAY
இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் இன்று மாலை 6.30 மணியளவில் வெளியிடுகிறார். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் இன்றைய அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளனர்.