சென்னை: 80களின் இறுதியில் தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்து வந்த ராமராஜன், 14 வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள படம் ‘சாமானியன்’. அவரது 45வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார்.
ராமராஜனும் 'சாமானியன்’ படமும்: தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.ராகேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், கதாசிரியர் கார்த்திக் குமார் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். ராமராஜனின் திரையுலக பயணத்தின் வெற்றிக்கு பெரும்பங்காற்றியது இசை எனலாம், அந்த வகையில், இளையராஜா உடன் ராமராஜன் 23 வருடங்களுக்குப் பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.
இந்த படத்தின் கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திரைக்கு வரும் சாமானியன்: இன்று இப்படம் ரிலீசாகியுள்ள நிலையில், நடிகர் ராமராஜன் உள்ளிட்ட சாமானியன் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கதாசிரியர் கார்த்திக் குமார் கூறுகையில், “இங்கே அங்கீகாரம் அழிக்கப்படலாம். ஆனால் அடையாளம் அழிக்கப்பட கூடாது. ஆனால் என்னுடைய அடையாளம் அழிக்கப்படுகிறது” என்றார்.
கதையாசிரியரின் களம்: மேலும் அவர் கூறுகையில், “எனக்கு 2015ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிபடையில் இந்த கதையை எழுதினேன். என் வாழ்வில் நான் சந்தித்த பல அவமானங்களையும், இழப்புகளையும், வலிகளையும் மையப்படுத்தி ஒரு கதையாக உருவாக்கி தயாரிப்பாளர் மதியழகனிடம் கூறினேன்.
அடையாளம் பறிக்கபடுகிறது: ஆனால், இந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வரும் போது கதை, திரைக்கதை, வசனம் என இருந்த என் பெயரில் திரைக்கதை, வசனம் என ஒவ்வொன்றாக பறிபோனது. இப்போது கதை என்ற ஒன்றுக்கு மட்டுமே என் பெயர் இருக்கிறது. அதுவும் ஒரு மூலையில் இருக்கிறது” என்றார்.
மேலும், தான் அப்போதும் எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. ஆனால் இப்போது அதுவும் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், பல தடைகளை தாண்டி படம் திரைக்கு வர இருக்கும் நேரத்தில், சிலர் இந்த படத்தின் கதை எங்களுடையது என்று கூறி வந்த நிலையில், இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் புகார் அளித்தவர்களின் கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆணித்தரமாக கூறி கடிதமே அளித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
கதாபாத்திரமும் பெயரும்: இந்த படத்தில் ராமராஜனின் கதாபாத்திர பெயரான சங்கர நாராயணன் என்பது எனது தாத்தாவின் பெயர். இந்த படத்தில் இடம்பெறும் சரஸ்வதி நிலையம் என்பது 2016-இல் நான் வாங்கிய வீட்டிற்கு வைத்த பெயர். இதில் நடித்த ஒரு சில கதாபாத்திரங்களின் பெயர் கூட என்னுடைய நெருங்கியவர்களின் கதாபாத்திரங்கள் தான்.
அங்கிகாரத்தை இழந்தேன்: இந்த படத்தில் பணியாற்றியதால் நான் பல விஷயங்களை இழக்க நேரிட்டது. ராமராஜன் சாரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், அதை பாதியில் தடுத்து விட்டார்கள். ஆனால், இந்த படத்தின் ’சாமானியன் ஒரு குழந்தையின் தகப்பன், நான் தான் என்கிற அடையாளத்தை அழிக்க முடியாது’ என்று கூறியுள்ளார், மேலும் நேற்று இந்த படத்தை பார்த்த 140 பிரபலங்களும் ஒவ்வொரு வசனத்திற்கும் கைதட்டினர். அவை நான் 13 நாட்களில் எழுதி முடித்தவை” என்றார்.
நாயகன் ராமராஜன்: மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராமராஜன், “என்னுடைய படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படக்குழுவாக பத்திரிகையாளர்களைச் சந்திப்பது இதுதான் முதல் முறை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்து இன்று இந்த சாமானியன் என்கிற படத்தின் மூலம் திரும்பி வந்திருக்கிறேன்” என்றார்
மேலும், இந்த படத்தில் இளையராஜாவுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். இதனை அடுத்து “ தான் சினிமாவை விட்டு இத்தனை வருடங்களாக ஒதுங்கவில்லை. நல்ல கதைக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் எனவும், எனக்கு இந்த கதை சரியாக இருக்கும் என மக்கள் ஒத்துக் கொள்வார்கள் என எண்ணியே இதில் நடித்துள்ளேன் என்றார்.
கதை தேர்வு செய்தல்: இப்போதுள்ள தலைமுறை என்னை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த கதையும், கதாபாத்திரமும் அமைந்துள்ளதால்தான், சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதோடு 86-களில் இருந்து 90-கள் வரை நான்கு வருடங்கள் மட்டுமே பீக்கில் இருந்த என்னை இன்றளவும் மக்கள் மனதில் ஞாபகம் வைத்திருக்க காரணம் இளையராஜவின் ரசனை மிகுந்த இசையே. அது இந்த படத்திலும் அமைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்கிறது என்றார்.
புதுயுக இடைவெளி: மேலும், ’டூரிங் டாக்கீஸ்’ காலத்து படங்களை பார்த்து வருபவன் நான் என்பதால், இந்த படத்தின் இடைவேளை காட்சியை போல வேறு எந்த படத்திலும் இதுவரை வந்ததில்லை என்று உறுதியாகச் சொல்வேன்.
படத்தின் பாடல்கள்: இந்த படத்தில் பாடல் காட்சிகளுக்கு இடம் இல்லை என்றாலும், இளையராஜா தானாகவே ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அதற்கு ஒரு இசை அமைத்துள்ளார். ஒருநாள் என்னை அழைத்து பின்னணி இசையுடன் படத்தை போட்டு காட்டியபோது, “ஏண்ணே! கரகாட்டக்காரனுக்கு போடுகின்ற மியூசிக் மாதிரியா இருக்கு, ஏதோ இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு” என்று அவரிடம் கூறினேன். படத்திற்கு அட்வான்ஸ் எதுவும் வாங்காமலேயே பின்னணி இசை தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்து விட்டார் இளையராஜா.
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார்: இத்தனை வருடங்களில் ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என பத்திரிகைகள் எழுதி, எழுதி கடைசியில் எனக்கு ஹீரோ வாய்ப்பே தேடி வந்தது. எத்தனையோ தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கிக் கொடுத்த நான் 44 படம் நடித்திருந்தேன்.
அதற்கு பிறகு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போது ஏன் ஒருத்தர் கூட நம்மை தேடி வரவில்லை, ஒரு வேலை சினிமா நமக்கு 144 போட்டு விட்டதோ என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், இது அற்புதமான 45-வது படமாக அமைந்து விட்டது” என்று கூறினார்.
படம் பதில் சொல்லும்: இயக்குநர் ஆர்.ராகேஷ் பேசும்போது, “ராப்பகலாக உழைத்து பல நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைத்து இப்படி ஒரு அருமையான படத்தை ரிலீஸுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த நேரத்தில் பல பேர் இது என்னுடைய கதை என்று கூறிக்கொண்டு வருகிறார்கள். அதற்கு படம் பதில் சொல்லும் என்றார்
பொதுமக்களுக்கான கதை: மேலும் அவர் கூறுகையில், இங்கே பெரும்பாலும் கடன் இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள் என நினைகிறேன். அனைவரின் வாழ்விலும் இருக்கும் கதை தான் இது. எனவே, பொதுவான விஷயத்திற்கு தனிப்பட்ட முறையில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் சங்கம் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: "காமெடி பண்றவங்கள யாரும் குறைச்சு நினைக்காதீங்க".. சிவகார்த்திகேயன் கருத்து! - Sivakarthikeyan About Soori