சென்னை: ’ஏழு கடல் ஏழு மலை’ டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. சராசரி மனிதனின் வாழ்க்கையை தனது எதார்த்தமான திரைக்கதை மூலம் படமாக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் ராம். ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த முதல் படமான ’கற்றது தமிழ்’ வனிக ரீதியாக வசூலை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. கற்றது தமிழ் படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ’பறவையே எங்கு இருக்கிறாய்’ பாடல் இன்று வரை பலரது விருப்பப் பாடலாக இருந்து வருகிறது.
இதனையடுத்து ’தங்க மீன்கள்’, ’பேரன்பு’, ’தரமணி’ ஆகிய படங்களை ராம் இயக்கினார். இந்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கியுள்ள திரைப்படம் ’ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ஏற்கனவே ஒரு வருடத்திற்கு மேல் ஆன நிலையில், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
ரஷ்யா மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ மற்றும் யுவன் இசையில் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று (ஜன.20) இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் நிவின் பாலி மரணமற்ற நபராக நடித்துள்ளார். அவருடன் சூரி மேற்கொள்ளும் ரயில் பயணமே படத்தின் மையக்கதையாகும்.
இதையும் படிங்க: சூர்யா நிராகரித்தது உண்மையில் வருத்தமாக இருக்கிறது - ’துருவ நட்சத்திரம்’ குறித்து கௌதம் மேனன் வேதனை - GVM ABOUT SURIYA
இப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாத நிலையில், த்ரில்லான ஆக்ஷன் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நிவின் பாலி கடைசியாக மலையாளத்தில் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், இப்படம் நிவின் பாலியின் கம்பேக்காக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூரியின் நடிப்பும் இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது. ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.