சென்னை: மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், விமல், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகுமிடம் வெகுதூரமில்லை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விமல், கருணாஸ், அருள்தாஸ், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் தயாரிப்பாளர் தேனப்பன் பேசும்போது, "தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரச்னையாக பேசப்படுவது உத்தம வில்லன் பஞ்சாயத்து மற்றும் மைக்கேல் ராயப்பன் பிரச்சனை. இந்த இரண்டு நாயகர்களை வைத்தும் நான் படம் பண்ணியுள்ளேன்.
சிம்புவை வைத்து படம் பண்ணுவதே பெரிய விஷயம் என்ற நிலையில், அவரை இயக்குநராக வைத்து படம் எடுத்துள்ளேன். எனக்கு பேசுவதற்கான உரிமை நிறைய உள்ளது. கமலை வைத்து திருப்பதி பிரதர்ஸ் உத்தம வில்லன் படத்தை எடுத்தனர்.
அப்போது நான்தான் தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளராக இருந்தேன். அந்த பிரச்னையில் நடிகர் கமல் கடிதத்தில் கையெழுத்து போட்டுக்கொடுத்தார் என்பது உண்மை. அப்படம் வெளியாக பணம் போட்டது ஈராஸ் நிறுவனம் தான். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஒரு ரூபாய் கூட போடவில்லை.
அந்த பணத்தை செட்டில்மென்ட் செய்தது ஞானவேல் ராஜா. அதனால் அடுத்த நாளே அந்த கடிதத்தை ஞானவேல் ராஜாவிடம் கொடுத்து விட்டனர். இதனால் திருப்பதி பிரதர்ஸ் கேட்பதற்கு எந்த தொடர்பும் இல்லை. ஞானவேல் ராஜா தான் இந்த உரிமையைக் கேட்க வேண்டும். ஞானவேல் ராஜாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, என் ஆதரவு எப்போதும் கமலுக்குத்தான் என்றார்.
மதுரை அன்புச் செழியனுக்கு கொதித்தெழுந்து பலர் பேட்டி கொடுத்தனர். ஆனால், கமலுக்காக யாரும் பேசவில்லை என்பதே எனக்கு வருத்தமாக இருக்கிறது. கமலை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளேன். ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இன்டர்நேஷனலில் இரண்டு படங்கள் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளேன்.
ராஜ் கமலில் பல ஆண்டுகள் மேலாளராக இருந்துள்ளேன். எனக்கு தெரியும் கமலைப்பற்றி. கமல் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் தேதி தருவதாகச் சொன்னார். ஆனால், அவர்களால் பணம் ரெடி பண்ண முடியவில்லை, இதுதான் உண்மை.
அதன்பிறகு, இவர்களே கமலிடம் முடியாது என்று சொல்லி, வேறு நிறுவனத்திற்கு தேதி கொடுக்கச் சொல்லி விட்டனர். அப்போதே இது முடிந்துவிட்டது. இப்போது திரும்ப திரும்ப கமல் போன்ற நடிகரை வெச்சு செய்வது சங்கடமாக இருக்கிறது. வல்லவன் படம் எடுத்தேன், உண்மையில் உரிமை இருந்தால் நான்தான் சிம்புவிடம் கேட்க வேண்டும். இன்று வரை நான் கேட்கவில்லையே. கமலிடமும் கால்ஷீட் கேட்கவில்லை” எனக் கூறினார்.
முன்னதாக, கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படம் தோல்வியால், அவர் மீண்டும் ஒரு படம் நடித்து தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் புகார் கடிதம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிரெண்டாகும் அமாவாசை : மீண்டும் அரசியல் திரைப்படத்தில் சத்யராஜ்? - Sathyaraj Starrer Role Of Modi