சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியை போல் 10 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஐஎஸ்பிஎல் (இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்) தொடர், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரின் அறிமுக விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, நடிகர் சூர்யா, அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 15ஆம் தேதி வரை நடைபெறும் இதில் மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஸ்ரீநகர் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
சென்னை சிங்கம்ஸ் அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக நேற்று நடந்த நட்பு ரீதியான போட்டியில் சச்சின், ரெய்னா, சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சூர்யா பேட்டிங் செய்ய, சச்சின் அவருக்கு பந்து வீசினார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது குறித்து ரெய்னா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் சூர்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, சூர்யாவின் குடும்பத்தைச் சந்தித்தது மகிழ்ச்சி என்றும், விரைவில் சென்னையில் சந்திப்போம் என்றும் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், "இந்த புகைப்படம் வாழ்நாள் முழுவதும் உள்ள மெமரீஸ் பிரதர், உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் சென்னையில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி சூர்யா ஏற்கனவே நட்சத்திர கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிய வீடியோக்களும், தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்திலும், சுதா கொங்குரா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: 2015 தமிழக அரசின் திரைப்பட விருது வாங்கிய பிரபலங்கள் கூறியது என்ன?