சென்னை: இந்தியா அளவில் பிரபல நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை (12ஆம் தேதி) தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் திரைத்துறையில் தனது 50ஆவது ஆண்டை நிறைவு செய்கிறார். ஞானவேல் நடிப்பில் ரஜினி நடித்து வெளியான 'வேட்டையன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்களில் முதன்மையாக இருக்கும் லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. இப்படம் தங்கம் கடத்தல் குறித்த கதை என கூறப்படும் நிலையில், ப்ரோமோ வீடியோவும் ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளது.
இப்படத்தில் ரஜினிகாந்த் ’தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கூலி திரைப்படம் தனிக்கதை எனவும், இப்படம் தனது LCU யுனிவர்சில் இடம்பெறாது என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வரும் ஜனவரியில் நிறைவடைகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி கூலி படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய கிளிம்ப்ஸ் வீடியோ இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் மற்றும் அமீர்கானின் தோற்றமும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. கடந்த ஆண்டு உலக அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: பெரிய படங்களின் வசூலை ஊதித் தள்ளும் ’புஷ்பா 2’; இந்தியாவில் மட்டும் 600 கோடி வசூல்!
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இதன் அறிவிப்பு வீடியோவும் ரஜனிகாந்த் பிறந்த நாள் அன்று வெளியாக உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கிளாசிக் திரைப்படமான தளபதி திரைப்படமும் நாளை தமிழ்நாட்டில் ரீரிலிஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.