சென்னை: தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகக் குறைவாக உள்ள நிலையில், தனது தனித்துவமிக்க வரிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாடலாசிரியர் உமாதேவி. மெட்ராஸ் படத்தில் தொடங்கிய இவரது திரைப் பயணம், கபாலி படத்தில் மாயநதி, காலா படத்தில் கண்ணம்மா பாடல் என தற்போது தங்கலான் மினுக்கி பாடல் வரை தொடர்கிறது. இந்நிலையில் தங்கலான் படம் குறித்தும், தனது திரைப் பயணம் குறித்தும் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசியது, “பத்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். அது ஒரு உற்சாகமான விஷயமாக இருந்தது. அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்று தற்போது பணியில் இருந்து விலகி, முழுநேர பாடல் எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்" என்றார்.
பாடலாசிரியர் உமாதேவி தான் எழுதிய முதல் பாடல் குறித்து பேசுகையில், ”மெட்ராஸ் படத்தில் முதல்முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் பாடல் எழுதினேன். அப்போது அவர் எழுதிய கவிதைகள் குறித்து நிறைய குறிப்பிட்டு பேசினார். மெட்ராஸ் படத்தில் ’நான் நீ’ பாடலை முதல் முயற்சியாக தான் எழுதினேன். பாடல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பாடல் வருமா என்று தெரியவில்லை என்று பா.ரஞ்சித் என்னிடம் சொன்னார். ஆனால் பாடல் படத்தில் இடம்பெற்று, வரவேற்பும் பெற்றது” என்றார்.
அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா பயணம் குறித்து பேசுகையில், “என்ஜிகே, கபாலி உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதினேன். பா.ரஞ்சித் உடனான புரிதல் தான் அவருடைய எல்லா படங்களிலும் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. தற்போது தங்கலான் வரை கொண்டுவந்துள்ளது என நினைக்கிறேன்” என கூறினார்.
மேலும் பாடல் வரிகளில் தமிழ் இலக்கியத்திற்கு உள்ள முக்கியத்துவம் குறித்து பேசுகையில், ”தமிழ் இலக்கியம் படித்ததும், தொடர் வாசிப்பும் தான் என்னை இயங்க வைக்கிறது. மகளிர் மட்டும் படத்தில் 'வாடி ராசாத்தி' பாடல் நமது வாழ்வியலில் இருந்து எழுதியதுதான். தமிழ் இலக்கியங்கள் ஆணின் வெற்றியை மட்டும் தான் புகழ்ந்து பேசியுள்ளது. பெண்ணின் வலிமையை பாடலில் சொல்லும் போது இலக்கியம் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளது. தமிழ் மொழியின் பெருமையே புதிய சொற்களை உருவாக்கும் திறன் தான்” என்றார்.
இதனைத்தொடர்ந்து காலா படத்தில் கண்ணம்மா பாடல் எழுதியது குறித்து பேசிய உமாதேவி, "தாய்மை என்பது பெண்ணுக்கானது என்று என்னால் சொல்ல முடியாது. இரக்கமற்ற தாயும் இங்கு இருக்கிறார்கள், அது ஒரு பொதுவான உணர்வு. இந்த பாடல் தன்னுடைய வலி” என்றார். பின்னர் அறம் படத்தில் எழுதிய புது வரலாறே பாடல் பற்றி பேசுகையில், ”காலம் காலமாக போர் நடந்து வருகிறது. அதில் கைவிடப்பட்டவர்களின் இடத்தில் இருந்து கிடைத்த புரிதலில் அப்பாடல் எழுதப்பட்டது.
இன்று வரை பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். ஆனாலும் பெண் இனம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒருகட்டத்தில் பிராமண சமூகத்தினர் ஒடுக்கப்பட்டார்கள், ஒருகட்டத்தில் பிராமணர்கள் அல்லாதோர் ஒடுக்கப்பட்டார்கள். ஒரு விஷயத்தை பூதாகரமாக சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றார்.
தங்கலான் படத்தில் மினுக்கி பாடல் குறித்து பேசுகையில், ”இது கொண்டாட்டமான பாடலாக எனக்கு அமையவில்லை. இந்த பாடல் மிகவும் புதிது. தங்கலான் படம் தங்கத்தை கண்டெடுக்கும் ஒரு போர். அதில் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று இப்பாடலை நாங்கள் யோசித்தோம். மினுக்கி கொண்டாட்ட பாடலாக வெளியில் தெரிந்தாலும், படத்தோடு பார்க்கும் போது மிக முக்கியமான பாடலாக இருக்கும்.
இந்திய பெண்களுக்கு தோள்பட்டை இறக்கமாக இருக்கும். ஒரு பெண் தனது ஆடையை அணிந்த பின் அடையக் கூடிய கொண்டாட்டமும் இப்பாடலுக்குள் உள்ளது. நான் அவ்வாறு புரிந்துகொண்டு, வட ஆற்காடு மாவட்டத்தின் சொற்கள் பயன்படுத்தியுள்ளேன். மேலும் ஜிவி பிரகாஷ் இப்பாடலை கேட்டு தெலுங்கில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்” எனக் கூறினார். தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் அரசியல் பற்றி பேசுகையில், ”தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் வருகை மடை மாற்றமாக நிகழ்ந்து, மிகப் பெரிய வரலாற்று மாற்றமாகவும் உள்ளது. அத்தகைய மாற்றங்கள் இன்னும் வளர்ந்து விரிவடைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விஜய் சேதுபதி இல்லை என்றால் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இழந்திருப்பேன் - இயக்குநர் சீனு ராமசாமி! - vijay sethupathi