சென்னை: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. இதனையடுத்து, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் சரித்திரப் படமாக உருவாகி உள்ளது. அது மட்டுமல்லாமல், பத்துக்கும் மேற்பட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் அவரது 44வது திரைப்படமாகும். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தில் பணியாற்றக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த விவரம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் கொடுத்து வந்த நிலையில், புதிய தகவலாக அந்தமானில் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் மாறுபட்ட தோற்றத்தில் எடுக்கப்பட்டுள்ள படத்தின் முதல் காட்சியை படக்குழு பகிர்ந்து இதனை அறிவித்து உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விண்டேஜ் லுக்கில் படம் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்தையும் அதே போன்ற தோற்றத்தில் தான் எடுக்க உள்ளார் என்பது சூர்யாவின் லுக் பார்த்தாலே தெரிகிறது.
இதையும் படிங்க: "மேடை பாடல் நிகழ்ச்சிகளின் பரிமாணமே லைவ் கான்செர்ட்" - பாடகி சக்திஸ்ரீ கோபாலன் கருத்து!