சென்னை: வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரமாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27ம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை, 415 கோடி வசூல் செய்துள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The force is unstoppable…❤️🔥#Kalki2898AD #EpicBlockbusterKalki @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth pic.twitter.com/hAXIwStnOb
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 30, 2024
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது.
'கல்கி 2898 கிபி' படத்தின் முதல் பாகத்தின் நிறைவு, இரண்டாம் பாகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பிரபாஸ் கதாபாத்திரத்தின் சரித்திரப் பின்னணி, சுப்ரீம் யாஸ்கினின் அடுத்தகட்ட நடவடிக்கை, சிருஷ்டியை பாதுகாக்கும் அஸ்வத்தாமாவின் பகிரத முயற்சி, புஜ்ஜி வாகனத்தின் மாயாஜால செயல்பாடு என இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தத் திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை நிகழ்த்தியிராத வசூல் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணிப் பிரபலங்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர்கள் நாகார்ஜுனா, அபிஷேக் பச்சன், யஷ், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட ஏராளமானோர் படத்தைப் பற்றி தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வசூல் சாதனையை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.