சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. தமிழ்த் திரையுலகில் இருபது வருடங்களுக்கு மேலாக வெற்றி வாகை சூடி சிறந்த நடிகராக பணியாற்றி வரும் ஜெயம் ரவி தற்போது திரைப்பட இயக்கத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். முன்னதாக, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அகிலன், இறைவன் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் அதாவது பொன்னியின் செல்வனாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
இந்த ஆண்டின் தொடக்கமாக இவரது நடிப்பில் வெளிவந்த சைரன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஜெயம் ரவி அளித்த பேட்டியில், தன்னிடம் மூன்று கதைகள் இருப்பதாகவும் விரைவில் அந்தக்கதைகளை படமாக இயக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும், ஒரு கதையில் யோகி பாபு நடிக்க உள்ளதாகவும் அவருக்கு 500 ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, மற்றொரு கதையில் அவரே நடிக்க உள்ளதாகவும் அந்தக் கதையை வேறு யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியாது என்பதால் நானே அதில் நடிக்கிறேன் என்று தெரிவித்தார். மற்றொரு கதையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க உள்ளேன். இந்த ஆண்டுக்குள் இதுகுறித்து நல்ல அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநராக உருவெடுத்துள்ள ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜா தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். மோகன்ராஜா இயக்கத்தில் வெளிவந்த 'தனி ஒருவன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், ஜெயம்ரவியும் இயக்குநராக உள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், நடிகராகச் சாதித்த ஜெயம்ரவி, இயக்குநராகவும் நிரூபிப்பார் என அவருடைய ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.. நடிகர் கார்த்திக் ரசிகர்கள் எதிர்ப்பு..!