சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 48 ஆண்டுகளாக இசை அமைப்பாளராக 1,400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளவர் இளையராஜா. இந்த நிலையில், ஒரு சிம்பொனி இசைத் தொகுப்பை எழுதி முடித்துள்ளதாக இளையராஜா வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது, “எல்லோருக்கும் வணக்கம். நான் தினமும் கேள்விப்படுகிறேன், என்னைப் பற்றி நிறைய இதுபோன்ற வீடியோக்கள் வந்து கொண்டு இருப்பதாக வேண்டியவர்கள் சொன்னார்கள். நான் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை.
ஏனென்றால், மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலையல்ல. என்னுடைய வேலையைக் கவனிப்பது என்னுடைய வேலை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமாக போய்க் கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டு இருக்கிற நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன்.
சினிமா பாடல்களை எடுத்துக் கொண்டும், விழாக்களில் கலந்து கொண்டும், இடையில் 35 நாட்களில் முழுவதுமாக நான்கு மூவ்மென்ட்ஸ் உள்ள சிம்பொனியை, சிம்பொனி என்றால் என்னவோ அதை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
ஏனென்றால் சினிமா இசை வேறு, பின்னணி இசை வேறு. இது எல்லாம் அதில் பிரதிபலித்தால் அது சிம்பொனி கிடையாது. அதனால் அது ஒரு ப்யூர் சிம்பொனியாக எழுதி முடித்துள்ளேன் என்பதை, என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் இளையராஜா இசைக் கச்சேரி.. எப்போது? டிக்கெட் விலை என்ன? முழு விவரம்! - Ilaiyaraaja Live Concert In Chennai