சென்னை: தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தேர்தல், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் புதிய தலைவராக சபேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது தலைவர் சபேஷ், செயலாளர் முரளி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன், பாடகர் மனோ உள்ளிட்ட திரைப்பட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய கங்கை அமரன் கூறியதாவது, “இந்த இரண்டு மைக்கை போல, இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சங்கம் நன்றாக இருக்கும். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் இளையராஜா உள்பட பல முன்னணி சங்க நிர்வாகிகளைச் சந்தித்தோம், அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சங்கத்திற்காக முதலாவதாக என்னிடம் நிதி பெற்றுக் கொள்ளுங்கள் என ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
இதனை சங்கத் தலைவரிடம் ஒப்படைகிறேன் என சபேஷிடம் ஒப்படைத்தார். இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என அனைவரது ஆசையை நிறைவேற்றும்படி, நாம் இங்கு புதிய கட்டிடத்தை எழுப்புவோம். இனிமேல் மாதம் மாதம் சபா போல, இங்கு இசை கச்சேரியை நடத்தலாம். நாம் மாதம் ஒருமுறை சந்தித்துக் கொள்ளலாம்” என கூறினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கங்கை அமரன், “மிக அழகாக இந்த பதவியேற்பு விழா நடைபெற்று இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட முன்னணி திரைப்பட இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் உதவியால், இந்த இடத்தில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. ஐந்து மாடி கட்டிடமாக இது அமைய உள்ள நிலையில், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
மேலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்கள் நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த கட்டிடப் பணிகளின் தொடக்க விழாவில், இசையமைப்பாளர்கள் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்பர். இனி வரும் காலங்களில் அவர்களளை அடிக்கடி பார்க்ககூடும். இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் இளையராஜாதான், அதிக தொகையை கொடுப்பார்” என கூறினார்.
இதையும் படிங்க: லப்பர் பந்து படத்திற்கும் திருச்சிக்கும் கனெக்ஷன்.. ஹரிஷ் கல்யாண் பேச்சு!