சென்னை: அமரன் படத்தை பார்த்துவிட்டு பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; ''அமரன் படத்தை மும்பையில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த படம் என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. தமிழ் திரை துறையில் ஒரு அங்கமாக இருக்கும் பாக்கியத்தை நான் உணர்ந்தேன்.
அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கை, அவரது வீரம் மற்றும் மரணத்தையும் எதிர்கொண்ட துணிச்சல் ஆகியவற்றை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உணர முடிகிறது. இதற்காக, இப்படத்தின் இயக்குனரும், எழுத்தாளருமான ராஜ்குமார் பெரியசாமி நிறைய ஆராய்ச்சி செய்து காட்சிகளை திறம்பட அமைத்துள்ளார்.
இந்தப் படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாபெரும் போராளிக்கு செலுத்தப்படும் ஒரு உண்மையான அஞ்சலி ஆகும். மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக மறுவடிவமைத்த இயக்குனர் ராஜ்குமாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதையும் படிங்க: “நான் சின்ன தளபதியா?” - சிவகார்த்திகேயனின் ரியாக்ஷன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை இன்னும் மெருகேற்றிக்கொண்டு மேஜர் முகுந்தன் கதாபத்திரத்தில் கட்சிதமாக பொருந்தியுள்ளார். இது அவரது கேரியரில் மிகச்சிறந்த நடிப்பாக அமையும். இது அவருக்கு பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும். இந்தப் படத்தின் மூலம் அவர் செய்த சாதனையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்துக்கு சாய் பல்லவியை தவிர யாரை போட்டிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்காது. அவர் படம் முழுவதும் புத்திசாலித்தனமாகவும், தைரியமாகவும் இருக்கிறார். மேலும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் சாய் பல்லவி பிரமிக்க வைக்கிறார்.
அன்புக்குரிய ஜி.வி. பிரகாஷ் குமார் தனது இசையினால் ஒவ்வொரு காட்சியிலும் படத்தை உயர்த்தியுள்ளார். பின்னணி இசை, படத்தை மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன், வாழ்த்துக்கள்.
இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் நிஜமான இடங்களில் எடுத்து கொடுத்துள்ள கமல்ஹாசன், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் மற்றும் சோனி பிக்சர்ஸ்க்கு வாழ்த்துக்கள். இது தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக எப்போதும் நினைவில் நிற்கும்.
அமரன் திரைப்படம் தமிழ் சினிமாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை. மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை உணர்ச்சிகரமாக வழங்கியதால் அனைவரையும் காண தூண்டும். நமது நாட்டு வீரர்களை நினைத்து பெருமைகொள்கிறன்'' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்