சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர். அதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை முதல் பாகத்தில் கதை நாயகனாக முன்னேற்றம் அடைந்தார். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது கருடன் படத்தில் நடித்துள்ளார்.
எதிர் நீச்சல், கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கருடன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக, சூரியின் நடிப்பு பாராட்டுக்களை குவித்து வருகிறது. மதுரையில் சூரி ரசிகர்கள் படம் வெளியான திரையரங்குகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதேபோல், சென்னையில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் உடன் படம் பார்த்த சூரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நெல்லை சூரி ரசிகர் மன்றத்தினர், முதல் நாள் முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளையும் அவர்களே பெற்று திரைப்படத்தைக் காண வரும் அனைவருக்கும் இலவசமாக வழங்கி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் அலங்கார் சினிமாஸ் திரையரங்கில் வெளியான கருடன் திரைப்படத்தைக் காண வந்த 300க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை மாவட்ட சூரி ரசிகர் மன்றம் சார்பில் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விடுதலை படத்தை தொடர்ந்து, இந்த கருடன் படமும் சூரிக்கு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. அடுத்ததாக, சூரி நடிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் வெளியாகிறது. கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத்ராஜ் இயக்கியுள்ள கொட்டுக்காளி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.
கருடன் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். படத்தின் இடைவேளை காட்சி மற்றும் இறுதிக் காட்சியில் சூரியின் நடிப்பு பிரமிக்க வைத்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மேடையில் பாலகிருஷ்ணா தள்ளிவிட்டதால் வெடித்த சர்ச்சை.. நடிகை அஞ்சலியின் ரியாக்ஷன் என்ன?